’முடக்கறுத்தான்’ – விமர்சனம்!

வீரபாபு, மஹானா, சூப்பர் சுப்பராயன், மயில்சாமி, காதல் சுகுமார், சாம்ஸ், அம்பானி சங்கர், கும்தாஜ், வெங்கல் ராவ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், முடக்கறுத்தான். ‘வயல் மூவி’ நிறுவனத்தின் மூலம் தயாரித்து எழுதி, இயக்கியிருப்பதுடன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார், சித்த மருத்துவர் வீரபாபு.

கதையின் நாயகன் வீரபாபு ஒரு சித்த மருத்துவர். ஆதரவற்ற குழந்தைகள், வயது முதிர்ந்த பெரியவர்களை பராமரித்து, அவர்களுக்கு தேவையானவற்றினை செய்து வருகிறார்.

வீரபாபு, காணாமல் போன தனது உறவினரின் குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார். அப்போது குழந்தைகளை கடத்தும் ஒரு மிகப்பெரிய மாஃபியா கும்பல் இதில் சம்பந்தபட்டிருப்பதையும், அவர்களிடம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் சிறைபட்டிருப்பதையும் அறிகிறார். அந்த மாஃபியா கும்பலிடமிருந்து அனைத்து குழந்தைகளையும் எப்படி மீட்கிறார், என்பதே முடக்கறுத்தான் படத்தின் கதை.

முழுக்க முழுக்க சினிமாவின் மீதுள்ள காதலால், முடக்கறுத்தான்  படத்தினை, தயாரித்து கதாநாயகனாக நடித்திருக்கிறார், சித்த மருத்துவரான வீரபாபு. கொரோனா முதல் கட்ட பரவலின் போது பலரை சாவின் விழும்பிலிருந்து இவர் காப்பாற்றியிருக்கிறார். தனக்கு எது வருமோ அதை முன்னிறுத்தி கதை, திரைக்கதை அமைத்து நடித்திருக்கிறார். பெரிதாக குறை சொல்லும்படி இல்லை, இவரது நடிப்பினை பொறுத்தவரை. சண்டைக் காட்சிகளில் இவரது பங்களிப்பு மகத்தானது. பல இடங்களில் உயிரை பனையம் வைத்து நடித்திருக்கிறார்

நாயகியாக நடித்திருக்கும் மஹானா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்.

பல சூப்பர் ஸ்டார்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்த சூப்பர் சுப்பராயன், கவனம் ஈர்க்கிறார்.

ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, மயில்சாமி இவர்களுடன் சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் பல காட்சிகளில் கடியாகவும், சில காட்சிகளில் சிரிக்கவும் வைக்கிறார்கள்.

முடக்கறுத்தான் படத்தின், தொழில் நுட்பத்தினை பொறுத்தவரை பெரிதாக சொல்ல எதுவும் இல்லை.

அருள் செல்வன் ஒளிப்பதிவு, சிற்பி இசை, பழநி பாரதி பாடல்கள்.

மொத்தத்தில், விறுவிறுப்பாக சொல்ல வேண்டிய ‘முடக்கறுத்தான்’ படத்தினை, சொல்லமுடியாமல் திணறி இருக்கிறார்கள்.