‘பேப்பர் ராக்கெட்’  –  ( வெப் சீரிஸ் )  விமர்சனம்!

‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ள வெப் சீரிஸ், பேப்பர் ராக்கெட்’.  கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இத்தொடரில் காளிதாஸ் ஜெயராமன், தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பலாழி, கௌரி கிஷன், நாகி நீடு, சின்னி ஜெயந்த், காளி வெங்கெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சைமன் கே கிங், வேத் ஷங்கர், தரண்குமார் ஆகியோர் இசையமைத்துள்ளனர். ரிச்சர்ட். எம். நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘Zee 5 OTT’  தளத்தில்  வெளியாகியிருக்கும்  ‘பேப்பர் ராக்கெட்’.  எப்படி இருக்கிறது? பார்க்கலாம்!

காளிதாஸ் ஜெயராமின் தந்தை நாகிநீடு. சிறுவயதிலேயே அம்மாவை இழந்த காளிதாஸுக்கு  அவருடைய அப்பாவே சகலமும். இருவரும் செய்து வரும் தொழில் காரணமாக தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் நாகிநீடு எதிர்பாராவிதமாக இறந்து விடுகிறார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர்  மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜிடம் உளவியல் ஆலோசனைக்கு செல்கிறார். அங்கு ஏற்கனெவே ஆலோசனைக்கு வந்திருக்கும் தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், நிர்மல் பலாழி, கெளரி கிஷன் ஆகியோருடன் நெருங்கிய நட்பு  ஏற்படுகிறது. எல்லோரும் சேர்ந்து தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றி கொள்ள ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தப்பயணத்தில் அவர்களது மன உளச்சலுக்கு தீர்வு கிடைத்ததா? என்பதை தனது சீரான திரைக்கதையின் மூலம் சிறப்பாக சொல்லியிருக்கிறார், இயக்குனர் கிருத்திகா உதயநிதி!

கதாபாத்திரங்களுக்கேற்ற நடிகர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் கிருத்திகா உதயநிதி. அது அவரது கதைக்கும், திரைக்கதைக்கும் வலுவினையும் அழகையும் கொடுத்துள்ளது. அவர்களது வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகள், நம்மில் பலருக்கும் பரிச்சயமான ஒன்றாக இருந்தாலும், அவர்களுக்காக மனம் உருகுகிறது.

காளிதாஸ் ஜெயராம் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். அதேபோல் தான்யா ரவிசந்திரனும். இவர்கள் வரும் காட்சிகளை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்ற அளவில் இருவரது நடிப்பும் இருக்கிறது. இவர்கள் உதட்டுடன் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சியில் வரம்பு மீறாத மென்மை! இயக்குனர் கிருத்திகா உதயநிதிக்கு ரொமேன்ஸ் நன்றாகவே வருகிறது. முழுக்க முழுக்க ஒரு ரொமேன்ஸ் படத்தை அவர் இயக்கலாம்!

நாயகி தான்யா ரவிச்சந்திரன் கதாபாத்திரமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது மாமாவின் மகள் கல்யாணத்தில் சொந்தக்காரர்கள் மத்தியில் அவர் பேசும் காட்சி பெண்களின் கைதட்டல்களுக்கு உரித்தானது.

சிறப்பாக நடித்திருக்கிறார் கருணாகரன்.  அவரது கதாப்பாத்திரம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. பல இடங்களில் இவர் பேசும் வசனங்கள் கூர்மையானவை. வசனகர்த்தாவை பாராட்டவேண்டும்.

கௌரி கிஷனின் காட்சிகளுக்கேற்ற நடிப்பும் அபாரமானது. அவரது சிரிப்பும் முகபாவனையின் முப்பரிமாணமும் ரசிகர்களை கொள்ளை கொள்ளும்!

இப்படி படத்தில் நடித்த பூர்ணிமா பாக்யராஜ், ரேணுகா, நிர்மல் பாலாழி, நாகிநீடு, காளி வெங்கட், சின்னி ஜெயந்த், ஜி.எம்.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி உள்ளிட்ட படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் அனைத்துமே நிறைவானவை.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் குளுமை.

ரம்யா நம்பீசன் பாடியுள்ள ‘சேரநாடு’ பாடல் மான்டேஜ் பாடல் கேட்க சுகமாக இருக்கிறது.

லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு மிக நேர்த்தியாக இருந்தாலும், ஸ்லோமோஷன் காட்சிகளை குறைத்திருக்கலாம். அதிகம் இருப்பதால் ஒரு சோர்வை தருகிறது. அதேபோல் பிண்ணனி இசை. சந்தோஷமான காட்சிகளிலும் சோகம் வழிந்தோடுகிறது. ஒரு கட்டத்தில் அவர்களுடைய டிப்ரஷன் நம்மை தொற்றிக் கொண்டுவிடுமோ? என்ற பயம் ஏற்படுகிறது..

வட்டார பாஷை அந்நியப்பட்டு நிற்கிறது. அதை சரியாக செய்திருக்கலாம்! குறிப்பாக நாகீநீடு, காளிவெங்கெட், சின்னி ஜெயந்த பேசும் காட்சிகளில் நேர்த்தி இல்லை!

இப்படி சில குறைகள் இருந்தாலும், ‘பேப்பர் ராக்கெட்’ மனதோடு நெருக்கமாகிக்கொள்கிறது!