மலேஷியாவை சேர்ந்த ‘ட்ரையம் ஸ்டுடியோ’ சார்பில் ஆண்டி தயாரித்துள்ள ‘பூ சாண்டி வரான்’ படத்தினை ‘வெள்ளித் திரை டாக்கீஸ்’ சார்பில் முஜிப் வெளியிட்டுள்ளார். (யோகிபாபு நடித்துள்ள படத்திற்கு ‘பூச்சாண்டி வரான்’ என்று பெயரிடப்பட்டுள்ளதால் இந்தப்படம் இலக்கணப் பிழையுடன் தலைப்பிடப்பட்டுள்ளது.)
மிர்ச்சி ரமணா, தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் , ஹம்சினி பெருமாள் , வினோத் மோகன சுந்தரம், தினேசினி நடித்துள்ள இப்படத்தினை எழுதி இயக்கியிருக்கிறார், ஜே கே விக்கி .
முழுக்க முழுக்க மலேஷியாவை சேர்ந்த நடிகர்களாலும், தொழில்நுட்ப கலைஞர்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (இதில் முஜிப், மிர்ச்சி ரமணா தவிர மற்ற அனைவரும் மலேசியா வாழ் தமிழர்கள் . ) எப்படி இருக்கிறது பூ சாண்டி வரான்?
ஒரே அறையில் தங்கியிருக்கும் தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன் நாதன், கணேசன் மனோகரன் மூன்று நண்பர்கள் ஆவிகளை வரவழைக்கும், ஓஜோ போர்டு வைத்து விளையாடுகின்றனர். அப்போது மல்லிகா என்ற பெண் ஆவி அவர்களுடன் பேசுகிறது. அந்த மூன்று நண்பர்களில் ஒரு மாற்றுத்திறனாளி நண்பர் தன்னுடைய காலை சரி செய்யமுடியுமா என கேட்கிறார். அதற்கு அந்த மல்லிகா ஆவி சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதற்கு பிறகு நடக்கும் பல்வேறு சுவாரஷ்யங்களும், திகில் திருப்பங்களும் தான் பூசாண்டி வரான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதையும் க்ளைமாக்ஸும்!
வெகு சில கதாபாத்திரங்களைக் கொண்டு யூகிக்க முடியாத திரைக்கதையை அமைத்திருப்பது இயக்குநரின் பெரிய வெற்றி. சிறிய பட்ஜெட்டில் சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள். ஜே கே விக்கி ஒரு புரடியூசர் ஃப்ரெண்ட்லி டைரக்டர். கடாரம், ராஜேந்திர சோழன், பாண்டிய மன்னர்களின் வரலாற்றில் தடுமாறியிருந்தாலும் திரைக்கதையின் சுவாரஷ்யத்தில் தடுமாறவில்லை!
ஆராய்ச்சியாளராக நடித்திருக்கும் மிர்ச்சி ரமணா உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். அசலிஷாம் பின் மொஹமத் அலியின் ஒளிப்பதிவும் , டஸ்டின் ரிடுன் ஷாவின் இசையும் படத்தின் சிறப்பை கூட்டியிருக்கிறது.
சிறிதாக சில குறைகள் இருந்தாலும் பெரிதாக தெரியவில்லை. அமானுஷ்யம், வரலாறு சம்பந்தமான படத்தினை விரும்புவர்களுக்கு இந்த ‘பூ சாண்டி வரான்’ பிடிக்கும்.
பார்க்கலாம்!