சிறுவன் சாமுவேல் – விமர்சனம்!

கன்ட்ரி சைட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், சாது பர்லிங்டன் தயாரித்து இயக்கியுள்ள படம், சிறுவன் சாமுவேல். சிறுவர்கள் அஜிதன், விஷ்ணு இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அபர்ணா, பிலிபோஸ்,  செல்லப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிறுவன் சாமுவேலுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது கொள்ளை பிரியம். இவனது பள்ளியில் படிக்கும் ராஜேஷும் நண்பர்களாகின்றனர், இருவரும் கையில் கிடைக்கும் பொருட்களை வைத்தும் தென்னை மரக்கிளையை கொண்டும் கிரிக்கெட் பேட் செய்து விளையாடி வருகின்றனர். இருவரது வீட்டிலுமே பொருளதார சிக்கல் என்பதால் கிரிக்கெட் பேட் கிடைப்பதில் சிக்கல்.

90 களில் பிறந்தவர்கள் பபுள்கம் அதன் ஃப்ரீபி கிரிக்கெட் கார்டுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு, அதை ஒவ்வொரு காரணத்திற்காகவும் சேகரித்து வந்தனர். ( இந்தக்கதை நடக்கும் காலமும் அதுவே.) அதைப் போலவே சிறுவன் சாமுவேலும் பல்வேறு வகைகளில் கிரிக்கெட் பேட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கார்டுகளை சேர்த்து வருகிறான். இதற்காக திருடவும் செய்கிறான். சாமுவேலின் ஒரு திருட்டால் அவனது நண்பன் ராஜேஷ் மீது திருட்டு பழி விழுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் சிறுவன் சாமுவேலின் நெகிழச்செய்யும் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்.

கன்னியாகுமரியின் மேற்கு பகுதியில் நடப்பது போன்ற ஒரு கதைக்களத்தை இயக்குநர் சாது பர்லிங்டன் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார். ஒட்டு மொத்த தமிழக வட்டார பாஷைகளில் புரிந்து கொள்ள சற்று கடினமாக உள்ள பாஷை என்றால் அது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேற்கு பகுதியில் பேசும் பாஷை தான், அழகாக அந்த பேச்சு வழக்கினையும் புது முக நடிகளையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சாது பர்லிங்டன்.

சாமுவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் அஜிதன், ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷ்ணு மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி இவர்களுடன் நடித்த சக சிறுவர்கள், அவர்களின் பெற்றோர்கள், டியூசன் டீச்சராக நடித்த பெண் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக மிகையின்றி நடித்திருக்கிறார்கள். படத்தின் பலமே அந்த மண்ணைச் சார்ந்த மனிதர்களே நடித்திருப்பது தான்.

ஒளிப்பதிவாளர் சிவானந்த் காந்தியின் ஒளிப்பதிவும், எஸ்.சாம் எட்வின் மனோகர் மற்றும் ஜே..ஸ்டாண்ட்லி ஜான் ஆகியோரது  இசையும் படத்தின் இன்னொரு பலம்.

சிறுவர்களின் மனநிலையிலிருந்து மாறாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் சாது பெர்லிங்டனை பாராட்டலாம்.

க்ளைமாக்ஸ் சரியாக இல்லாவிட்டாலும், சிறுவன் சாமுவேல் வித்தியாசமான நல்ல முயற்சி, குடும்பத்தினருடன் பார்க்கலாம்.