சதுரங்க ஆட்டத்தில் சாமானியரின் போர்க்குரல். (விமர்சனம்.)தி கிராண்ட் மாஸ்டர்.
Abarnathi's Emotional Chess Battle to Save Her Husband
இயக்குநர் வெற்றிச் செழியன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கிராண்ட் மாஸ்டர்’ (The Grand Master) திரைப்படம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் பேசும் ஒரு முக்கியப் படைப்பாக வெளிவந்துள்ளது.
இப்படத்தில் அபர்ணதி முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் லிங்கேஷ், சுரேஷ் மேனன், சிறுவன் அஸ்வின், தமிழரசி மற்றும் அன்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து தங்களின் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். இன்றும்கூட சாதியக் கொடுமைகளைப் பேசும் படங்கள் தேவையா என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு, புதுக்கோட்டை மாவட்டத்தின் ‘வேங்கை வயல்’ கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வுகளே மிகச்சிறந்த பதிலாக அமைந்து, இத்திரைப்படத்தின் அவசியத்தை உணர்த்துகிறது.
இந்தத் திரைப்படத்தின் மையக்கதை மிகவும் எதார்த்தமான அதே சமயம் அதிர்ச்சியூட்டும் பின்னணியைக் கொண்டது. கதையின் நாயகியான அபர்ணதியும், அவரது கணவராக வரும் லிங்கேஷூம் ஒரு கிராமத்தில் துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை செய்து வருகின்றனர். கடும் சாதியக் கட்டுப்பாடுகள் நிறைந்த அந்த ஊரில் வாழும் சூழலில், அங்குள்ள ஆதிக்க சக்தியினரால் ஒரு செஸ் விளையாட்டுப் போட்டியில் வலுக்கட்டாயமாகப் போட்டியிட வைக்கப்படுகிறார் அபர்ணதி.
சதுரங்க விளையாட்டைப் பற்றி அடிப்படை விவரங்கள் கூட சிறிதும் அறிந்திராத ஒரு எளிய பெண், தனது கணவனின் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும்போது என்ன செய்தார் என்பதே இப்படத்தின் பரபரப்பான கதையாகும்.
படத்தில் வில்லனாக வரும் சுரேஷ் மேனன் தீட்டும் அனைத்து சதிகளையும், செஸ் விளையாட்டைப் பற்றித் தெரியாத அபர்ணதி தனது அறிவுபூர்வமான சிந்தனையால் எதிர்கொள்ளும் காட்சிகள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செஸ் விளையாட்டின் ஒவ்வொரு காய்களையும், அதனுடைய தனித்துவமான நகர்வுகளையும் பற்றி அவர் தனது மகனிடம் விவரிக்கும் காட்சிகள் அற்புதம்.
இக்காட்சிகள், முறையான தளமும் வாய்ப்பும் கிடைத்தால் திறமைக்கு எந்தவிதமான சாதி, மத பேதமும் இல்லை என்பதை மிக ஆழமாகப் பதிவு செய்கின்றன. மேலும், சமுதாயத்தில் மிகக் கீழ்மட்டத்தில் வைக்கப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் நிஜமான வலி மற்றும் அவர்களது தினசரி வேலைப் பளுவினை எவ்விதப் பூச்சுமின்றிக் காட்டியிருப்பது படத்தின் நம்பகத்தன்மையை அதிகப்படுத்துகிறது.
நடிப்பைப் பொறுத்தவரை, படத்தின் அத்தனை பாரத்தையும் தாங்கி நிற்கும் அபர்ணதி, ஒரு தூய்மைப் பணியாளராகவும், கணவனைக் காக்கப் போராடும் மனைவியாகவும் மிகச்சிறப்பான மற்றும் முதிர்ச்சியான நடிப்பைக் கொடுத்துள்ளார். இவருக்கு இணையாகக் கணவனாக நடித்திருக்கும் லிங்கேஷ், வில்லனாக வரும் சுரேஷ் மேனன், சிறுவன் அஸ்வின், தமிழரசி மற்றும் அன்பு உள்ளிட்ட அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை உணர்ந்து தங்களால் இயன்ற அளவில் சிறந்த ஒத்துழைப்பைக் கொடுத்துள்ளனர்.
இயக்குநர் வெற்றிச் செழியன் இந்த ஒட்டுமொத்தக் கதையையும் மிகவும் எமோஷனலாக அணுகியிருப்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகத் தெரிகிறது.இருப்பினும், இத்திரைப்படத்தில் சில கமர்ஷியல் பலவீனங்களும் இருக்கவே செய்கின்றன. இயக்குநர் கதையில் வைத்திருக்கும் சில நாடகத்தனமான காட்சிகளைத் தவிர்த்து, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பான சுவாரசியத்தைச் சேர்த்திருந்தால், இது வலுவானதொரு கமர்ஷியல் படமாக மாறியிருக்கும்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டோரின் வாழ்வியலையும் ஆதிக்க அரசியலையும் பேசும் எத்தனையோ படங்கள் வந்துவிட்ட நிலையில், அந்தப் வரிசையில் இதுவும் ஒரு சராசரிப் படமாக மட்டுமே இணைந்து கொள்கிறது. ஆழமான எமோஷனல் காட்சிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் எதார்த்தமான போராட்டத்தை மட்டுமே நம்பி இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.