தீராக் காதல் – விமர்சனம்!

காதலில் தோல்வியடைந்த ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் தனித்தனியே திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். சில வருடங்கள் கழித்து சந்தித்துக்கொள்ளும் அவர்கள், தங்களது திருமண வாழ்க்கை குறித்தும், தங்களின் காதல் குறித்தும் பேசுகின்றனர். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யின் மீது மீண்டும் காதல் கொள்கிறார். இதன் விளைவாக ஐஸ்வர்யா ராஜேஷ், தனது கொடுமைக்கார கணவன் அம்ஜத் கானை விவாகரத்து செய்வதோடு, ஜெய்யையும் விவாகரத்து செய்துவிட்டு தன்னுடன் வாழவேண்டும் என நிர்பந்திக்கிறார். தனது மனைவியுடனும், குழந்தையுடனும் வாழ ஆசைப்படும் ஜெய் என்ன முடிவெடுத்தார், என்பதே தீராக்காதல்!

தீராக் காதல் படத்தில் 4 முக்கிய கதாபாத்திரங்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்த ஜெய், ஷிவதா, அம்ஜத் கான், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய்க்கு இது ஒரு நல்ல படமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து, உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துகிறார். ஐஸ்வர்யா ராஜேஷின் காதலராகவும், ஷிவதாவின் கணவராகவும், குழந்தையின் அப்பாவாகவும் வேறுபட்ட நடிப்பின் மூலம் ரசிகர்களை எளிதில் கவர்கிறார்.

ஜெய்யின் மனைவியாக நடித்திருக்கும் ஷிவதாவிற்கு நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு! அதை மிகச்சரியாக அட்டகாசமாக செய்திருக்கிறார். திறமையான நடிகை என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார்.

சமீபகாலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திலும் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவர், இந்தப்படத்திலும் தனது முத்திரையை பதிவு செய்திருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கிறார், அம்ஜன் கான். அளவாக நடித்திருக்கிறார். இவரைப் போலவே ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வ்ரித்தி விஷால் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் சித்து குமாரின் இசை இரன்டும் படத்தின் பலமாக இருக்கிறது.

படத்தின் முதல் பாதி சுவாரசியமில்லாமல் இருந்தாலும், இரண்டாம் பாதி அதை ஈடுகட்டுவதோடு சிறப்பான க்ளைமாக்ஸ், ரசிக்க வைக்கிறது.

ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரங்கள் சற்றே தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் விரசமாகியிருக்கும். அதை லாவகமாக கையாண்டு கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.

காதல் தோல்வியில் பிரிந்த காதலர்கள் மீண்டும் சந்தித்து கொள்ளும்போது ஒரு எல்லை வரையறை வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார், ‘தீராக் காதல்’ திரைப்படத்தின் இயக்குநர் ரோஹின் வெங்கடேசன்.

 

ரேட்டிங்  3/5