திருமணம் – விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கதாசிரியர் இயக்குநர் சேரன் மங்கலகரமான திருமணத்துக்கு வந்திருக்கிறார் ,சில திருத்தங்களுடன்.!

கொலை ,கொள்ளை, ஆபாசம் அடிதடி தவிர்த்து வந்திருப்பது ஆறுதல். பேஸ்புக் வழி காதலால் மனம் கலந்தவர்களால் திருமணத்தில் கூட முடியாமல் போவதேன்?

காரண காரியங்களை தனக்கே உரிய குரலில் சொல்லி இருக்கிறார். சேரன் வருமானவரித்துறை அதிகாரி.இவரின் தங்கை காவ்யாவுக்கு தனியார் துறையில் பணி. அம்மா வடிவாம்பாள் ,மாமா தம்பி ராமையா. அளவான குடும்பம். பக்கா செட்டிநாட்டு தோற்றம்.வடிவாம்பாளின் பவள மாலை தெக்கித்தி சீமையின் கைம்மை அடையாளம். உமாபதிக்கு தனியார் எப்.எம்.மில் வேலை.சித்தப்பா எம்.எஸ்.பாஸ்கர்.அக்கா சுகன்யா..கைக்கு அடக்கமான குடும்பம் என்றாலும் ஜமீன் பரம்பரை.

உமாபதி,காவ்யா கல்யாணத்துக்கு சாதியோ,அந்தஸ்தோ தடையில்லை என்றாலும் கல்யாணம் என்றால் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற மாயை, ஆடம்பரம் தேடுகிற சுகன்யாவினால் பிரிய நேரிடுகிறது.

பிரிந்தவர்களை எப்படி சேரன் சேர்த்து வைக்கிறார் என்பது சற்றே நீளமுடன்.!
இந்த கேரக்டருக்கு இவர்தான் பொருந்துவார் என நடிகர்களை தேர்வு செய்வதில்அடங்கி இருக்கிறது வெற்றியின் ரகசியம். படத்தின் நாயகன் உமாபதி,நாயகி காவ்யாவாக இருந்தாலும் நம் நெஞ்சைக் கலங்கடிப்பது எம்.எஸ்.பாஸ்கர்,தம்பி ராமையா இருவரும்தான்.!

பிற்பாதியில் அவரவர் சுயசரிதையை சொல்கிறபோது நம்மையறியாமலேயே தேம்புகிறோம்.
வெட்டிச்செலவு,டாம்பீகத்தின் உச்சம்,என சேரன் பட்டியலிடுகிற எல்லாமே கோடீஸ்வரர்களுக்குரிய குணநலன்கள். அவைகளை மாத ஊதியத்தில் குடும்பத்தைக் கடத்துகிறவர்கள் ‘கடன் வாங்கி’ கல்யாணத்தை நடத்துகிற போதுதான் அவர்களின் கழுத்துக்கு கயிறாகிறது. வருமானவரித் துறை உயரதிகாரி ஜெயபிரகாஷ் வழியாக சொல்லி இருக்கிறார் சேரன்.

முதல்பாதியை விட இடைவேளைக்குப் பிறகுதான் இயற்கை விவசாயத்தின் மேன்மை வலியுறுத்தப்படுகிறது. கதையை விட்டு விலகியதைப் போல உணர்வு.!
பரதத்தின் அழகு,அதற்கிணையான கோட்டில் இன்றைய நடனம் என வகை பிரித்து காவ்யா,உமாபதியை படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ்வை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.!ஆனால் காவியாவை பரதத்தில் காட்டி விட்டோம் அதற்கு ஈடாக உமாபதியையும் காட்டியாக வேண்டும் என்கிற அவசியம் ஏன் வந்தது இயக்குனருக்கு?
சுகன்யாவுக்கு பொருந்துகிற கேரக்டர் என சொல்லுகிற அளவுக்கு பொருமக் கூடிய வேடம்.
குடும்பத்துடன் பார்க்க ஒரு படம்.