அம்மாவின் செல்லப் பிள்ளையாக, தொழில்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு இளைஞன். தாயின் விருப்பத்திற்காக ஒலிம்பிக் மேடையில் தங்கம் வென்று பெருமை சேர்த்தாலும், ‘திருமணம்’ என்ற பந்தத்திற்குள் மட்டும் தன் வாழ்நாளில் நுழையவே கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறான். மகனுக்கு ஒரு வாரிசு இல்லையே என்று ஏங்கும் தாயின் ஆசையை நிறைவேற்ற, அவன் தேர்ந்தெடுக்கும் வழிதான் வாடகைத்தாய் முறை. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் அந்தக் குழந்தையின் உயிருக்கு ஆபத்து வர, குழந்தையைக் காப்பாற்ற அதன் வாடகைத்தாயைத் தேடி ஓடுகிறான். அங்கே அவனுக்குக் காத்திருக்கும் அதிர்ச்சிதான், தன்னை விட 20 வயது குறைவான இளம் பெண் மமிதா பைஜு. பணத்திற்காக இதில் சம்மதித்த மமிதா, குழந்தையைக் காப்பாற்ற அவனுடன் பயணிக்கும்போது, மெல்லக் குழந்தையின் மீதும், அதன் தந்தை சூர்யாவின் மீதும் காதலில் விழுகிறார். இந்த விசித்திரமான இக்கட்டான சூழலை, மேல்தட்டு மக்களின் குடும்ப நாடகமாகப் பேசுகிறது இயக்குநர் வெங்கி அட்லூரியின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
கார்ப்பரேட் உலகின் பிசினஸ்மேன் ‘சஞ்சு விஸ்வநாத்’ பாத்திரத்தில் சூர்யா தனது அசாத்திய ஸ்டைலால் மிரட்டியிருக்கிறார். வயது குறைவான பெண்ணின் காதலை மறுக்கும் இடத்திலும், திருமணமே வேண்டாம் என்று மறுக்கும் பிடிவாதத்திலும், அம்மாவின் மீதான பாசத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் காட்சிகளிலும் அவரது முதிர்ச்சியான நடிப்பு பளிச்சிடுகிறது. அதிலும் குறிப்பாக, அம்மாவுக்காக அவர் உடைந்து அழும் காட்சி தியேட்டரில் இருக்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. பணக்காரராக இருந்தாலும் எளிமை, பெற்றோரை மதிக்கும் குணம் போன்ற கருத்துக்களைத் தனது பாத்திரத்தின் மூலம் சூர்யா ரசிகர்களுக்கு கடத்தியுள்ளார்.
நாயகியாக வரும் மமிதா பைஜு, தனது துள்ளலான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கிறார். அமெரிக்க ஆங்கிலத்தையும், தமிழையும் மிக இயல்பாகப் பேசி, மகிழ்ச்சி, சோகம், வெட்கம் என மனித உணர்வுகளை அழகாகக் கையாண்டு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளார். சூர்யாவின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, தனது நீண்டகால அனுபவத்தால் காட்சிகளை மிக இயல்பாக நகர்த்தியுள்ளார். ரவீனா டாண்டன், சுனில் ரெட்டி, ராஜீவ் மேனன் ஆகியோரும் தங்களது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி, திருமண உறவை வெறுக்கும் ஒரு ஆணின் பார்வையில் கதையை நகர்த்தியிருந்தாலும், அவர்களின் உலகத்தை மிகவும் தைரியமாகத் திரையில் கொண்டு வந்துள்ளார். இமேஜ் பார்க்காமல் இப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த சூர்யாவின் துணிச்சலைப் பாராட்டியே தீர வேண்டும். எளிமையான கதை, மெதுவான நகர்வு என்றாலும் நவீன் நூலியின் படத்தொகுப்பு பார்வையாளர்களின் கவனத்தைத் திரையோடு ஒட்ட வைக்கிறது. நிமிஷ் ரவியின் ஒளிப்பதிவு படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவானதை நிரூபிக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசையில் மெலோடி பாடல்களும், பின்னணி இசையும் மனதை வருடுகின்றன. மகனின் செயல்பாடுகளை அம்மா கண்டிக்காமல் சாதாரணமாக எடுத்துக்கொள்வது போன்ற சில காட்சிகள் நெருடலை ஏற்படுத்தினாலும், ‘கோபமும் வெறுப்பும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடும்’, ‘சண்டைகளால் உறவுகள் பிரிவதில்லை, அதற்குப் பின் பேசத் தெரியாமல் தான் பிரிகிறது’ போன்ற ஆழமான வசனங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. சில தத்துவப் பின்னடைவுகளைத் தாண்டி, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ குடும்பங்கள் ரசிப்பதற்கான ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம்.