‘மைலாஞ்சி’ –   விமர்சனம்!

‘அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில், ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், முனீஸ்காந்த் , சிங்கம் புலி உள்ளிட்டோரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘மைலாஞ்சி’. எழுதி இயக்கியிருக்கிறார், அஜயன் பாலா. இசை, இளையராஜா. ஒளிப்பதிவு, செழியன்.

வன விலங்கு புகைப்பட ஆர்வலர், ஶ்ரீராம் கார்த்திக். ஒரு அபூர்வமான பறவையை புகைப்படம் எடுப்பதற்காக, சென்னையிலிருந்து ஊட்டிக்கு செல்கிறார். அங்கே, வசிக்கும் கிரிஷா குரூப்பின் நட்பு கிடைக்கிறது. அதை பயன் படுத்திக்கொண்டு, தான் தேடி வந்த அந்த பறவையை படம் பிடிக்க முயற்சிக்கிறார். இவர்களது தொடர்ச்சியான சந்திப்பிற்கு பின்னர், கிரிஷா குருப்பின் மீது காதல் கொள்கிறார். ஶ்ரீராம் கார்த்திக் தனது காதலை சொல்லப்போகும் தருவாயில், கிரிஷா குரூப் சென்னையில் வசிக்கும் தனது காதலைனை கண்டுபிடிக்க உதவுமாறு அவரிடம் கேட்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது. என்பதுதான் ‘மைலாஞ்சி’ படத்தின் கதை.

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை, ஒளிப்பதிவுக்கும், இசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைக்கதை, உறவுகளின் உணர்வுகள் எதுவுமில்லாமல் அழுத்தமின்றி இருக்கிறது. முக்கிய கதாபாத்திரமான கிரிஷா குரூப்பின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்படவில்லை. என்பது படத்தின் ஆகப்பெரும் பலவீனம்.

வனவிலங்கு புகைப்பட ஆர்வலராக நடித்திருக்கும் ஸ்ரீராம் கார்த்திக், அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தனது ஒரு தலைக்காதலை வெளிப்படுத்தும் தருணத்தில் நன்றாக நடித்திருக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் கிரிஷா குரூப் நடிக்க முடியாமல், சரியான முகபாவனையை வெளிகாட்ட முடியாமல் தவித்திருக்கிறார்.

சிங்கம் புலி, முனிஸ்காந்த் இருவரும் காமெடிக்காக பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது காமெடிக்காட்சிகளை ரசிக்க முடியவில்லை.

பெரிதாக, ரசிகர்களை ஈர்க்க முடியாத திரைக்கதை அமைத்து, சோர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள்.  இசைஞானி இளையராஜாவின் இசையும், செழியனின் அற்புதமான ஒளிப்பதிவும் மட்டுமே கவனம் ஈர்க்கிறது.

மைலாஞ்சி –  வறட்சி!