‘வெஞ்சென்ஸ்’ –  விமர்சனம்!

‘ஏசி புரொடக்ஷன்ஸ்’ சார்பில், ஏ பி அசோக்குமார் தயாரித்திருக்க, எழுதி இயக்கியிருக்கிறார், ராகுல் அசோக். அபர்னதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஷரவண சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காளி வெங்கட்டின் ஒரே மகள், அபர்னதி. பள்ளி படிக்கும் காலத்தில் , அமைதியான சுபாவம் கொண்டவராக இருக்கிறார். தன்னுடன் படிக்கும் சக மாணவ மாணவிகளுக்கோ, ஆசிரியர்களுக்கோ இவரைப்பற்றி அதிகம் தெரிவதில்லை. ஒரு கட்டத்தில் தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்களோ, என்ற அவருக்கு எண்ணம் உருவாகிறது. இதை காளி வெங்கெட்டிடம் சொல்லி வருத்தப்படுகிறார். அதற்கு, காளி வெங்கெட் நடைபெறப்போகும் பொதுத்தேர்வில், நன்றாக படித்து மாநில அளவில் முதலிடம் பெற்றால், தமிழகமே உன்னைப்பற்றி தான் பேசும். என கூறி ஆறுதல் படுத்துகிறார். அதனால், அபர்னதி காளி வெங்கட் சொன்னபடியே படித்து மாநில அளவில் முதலிடம் பெறுகிறார். அனைவரும் அபர்னதியை பாராட்டி பேசுகின்றனர். அந்த செய்தி பல பத்திரிகைகளிலும் இடம் பெறுகிறது. இந்த பாராட்டுகள் அபர்னதிக்கு பெரும் போதையைத் தருகிறது. அடுத்தடுத்து படித்து கலெக்டராகிறார். அதோடு தினந்தோறும் தன்னைப்பற்றி மக்கள் பேசுவதற்காக எதை வேண்டுமானாலும், அவருடைய புத்தி சாதூர்யத்தால் செய்யத் துணிகிறார்.

கலெக்டராக பணிபுரியும் காலத்தில் முதலமைச்சருடன் மோதல் ஏற்பட்டு அவரை எதிர்த்து, செயல்படுகிறார். அதனால், அபர்னதியை அடக்க அரசியல்வாதி ஜான்விஜய் களமிறக்கப்படுகிறார். இதனால், அபர்னதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது? என்பதை பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்வதே ‘வெஞ்சென்ஸ்’ திரைப்படத்தின் கதை.

வெஞ்சென்ஸ், அதிகார மைய்யங்களுக்கிடையே நிகழும் பரமபத விளையாட்டை, தேர்தல் நேர தில்லு முல்லுகளை வெகுவாக ரசிக்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் ராகுல் அசோக். அரசியல் பின்னணியில் செல்லும் திரைக்கதை, ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாக செல்கிறது.

வேணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்னதி, கிடைத்த வாய்ப்பை சிறப்பாக கையாண்டிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பான அழுத்தமான கதாபாத்திரத்திற்கேற்றபடி மிரட்டலான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். முதலமைச்சர் கதாபாத்திரத்தில் இளவரசு , ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஷரவண சுப்பையா, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தியிருக்கின்றனர்.

எம் எஸ் பிரபுவின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் பின்னணி இசையும் ஓகே!

வெஞ்சென்ஸ் ரசிக்கத்தக்க வகையிலான பொலிட்டிகல் க்ரைம் டிராமா!