‘கொலைச் சேவல்’  –  விமர்சனம்!

கலையரசன், தீபா பாலு, பால சரவணன், கஜராஜ், விஜய் சத்யா மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்துள்ள திரைப்படம், கொலைச்சேவல். வி. ஆர். துதி வாணன் இயக்கியிருக்க, ‘ஆர்பி ஃபிலிம்’ சார்பில் ஆர்பி பாலா, கௌசல்யா பாலா தயாரித்துள்ளனர்.

ஆணவக் கொலைதான் படத்தின் கதை. அதை. சற்றே அமானுஷ்யம் கலந்த திகிலுடனும், கோரமான கொலைக்காட்சிகளுடனும் சொல்லியிருக்கிறார், இயக்குநர் துதிவாணன்.

இரு வேறு பிரிவு சமூகங்களை சார்ந்த கலையரசனும், தீபா பாலுவும் காதலர்கள். இவர்களுடைய திருமணத்திற்கு தீபா பாலு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கலையரசன் வீட்டினரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடக்கிறது. வருடங்கள் சென்ற நிலையில், சொந்த ஊரில் இருக்கும் குல தெய்வக் கோயிலுக்கு கலையரசன் தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், தனது நிறைமாத கர்ப்பினி தீபா பாலுவுடன் செல்கிறார். இந்த விஷயம், தீபா பாலுவின் அப்பா கஜராஜூக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை பதை பதைப்புடன் சொல்லப் பட்டிருப்பது தான், ‘கொலைச் சேவல்’  திரைப்படத்தின் கதை.

படத்தின் முதல் பாதி, பேய்க்கதையா? எந்த மாதிரியான கதை. எதை நோக்கிச்செல்கிறது. என்பது தெரியவில்லை. இது, சுவாரசியத்தைக் கொடுத்தாலும், எதை நோக்கி செல்கிறது. என்பது புரியாமல் சிலருக்கு சலிப்பையும் கொடுக்கிறது. கலையரசனுக்கும், தீபா பாலுவிற்குமான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், இவர்கள் இருவரும் ஒரே வண்டியில் ஊருக்குள் சுற்றி வரும் காட்சிகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லைகிவர்கள் இப்படி ஒன்றாக சுற்றி வரும் போது, தீபா பாலுவின் வீட்டிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எந்த காட்சிகளும் இல்லாதது படத்தின் பலவீனம். க்ளைமாக்ஸ் காட்சிகள் ஒரு சார்பாக இருப்பது போன்ற உணர்வைத் தருகிறது. கதைக்கு சம்பந்தம் இல்லாத அமானுஷ்ய காட்சிகள் எதற்காக? தெரியவில்லை.

கலையரசன் பல படங்களில் இது மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து விட்டார். நடிப்பில் பெரிதாக குறிப்பிட்டு சொல்ல எதுவும் இல்லை. ஆனால், க்ளைமாக்ஸில் மிகுந்த சிரத்தை எடுத்து ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்து பாராட்டு பெறுகிறார். அவரைப்போலவே கஜராஜ், சண்டைக்காட்சியில் மிகுந்த உழைப்பினை கொடுத்துள்ளார். வசனமே இல்லாமல் இறுக்கமான முகத்துடன் நடித்தும் இருக்கிறார். தீபா பாலுவின் தோற்றமும், நடிப்பும் தனிக்கவனம் பெறுகிறது. பால சரவணன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

ஒளிப்பதிவு ரசிக்கும் படி இருக்கிறது. பின்னணி இசை தனிக்கவனம் பெறுகிறது. வன்முறை காட்சிகளை கொஞ்சம் தவிர்த்திருந்தால் எல்லோரும் ரசிக்கும் வண்ணம் இருந்திருக்கும்.