‘கெணத்த காணோம்’ –  விமர்சனம்!

‘கெணத்த காணோம்’ திரைப்படத்தை ‘ஆர். பி. டாக்கீஸ்’, ‘பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ’ சார்பில், எஸ் ஆர் ரமேஷ்பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரித்துள்ளனர். யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர்,விக்ரமாதித்யன், ரேச்சல் ரெபேக்கா, ராமகிருஷ்ணன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

தமிழகத்தின் கடும் வறட்சி பாதித்த ராமநாதபுரம் மாவட்டம். கோடாங்கி பட்டி எனும் வறட்சி மிகுந்த கிராமத்தில், கோவில் பூசாரியாக இருந்து வருபவர், யோகிபாபு. இவர் லவ்லின் சந்திரசேகரை காதலித்து வருகிறார். யோகிபாபுவின் கிராமத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் லவ்லின் சந்திர சேகரின் அப்பா, இவர்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வருகிறார்.

தண்ணீர் பிரச்சனைக்கு, அரசிடம்  பல கோரிக்கை வைத்து பலனளிக்காத நிலையில், கிராமத்தினர் அணைவரும் ஒன்றுகூடி ஒரு பெரிய கிணற்றை தோண்ட முடிவு செய்கின்றனர். அப்போது நீரோட்டம் யோகிபாபுவிற்கு சொந்தமான இடத்தில் இருப்பதை அறிகின்றனர். இதனால் யோகிபாபு மட்டுமின்றி மொத்த கிராமமும் சந்தோஷப்படுகிறது. கிணறு வெட்ட ஆரம்பிக்கின்றனர். ஒரு சில அடிகள் தோண்டிய நிலையில், டைனோசரின் படிமம் தென்படுகிறது. இது அரசின் தொல்லியல் துறைக்கும் தெரிய வருகிறது. இதனால், யோகிபாபுவின் இடம் மட்டுமின்றி மொத்த கிராமத்தையும் அரசு கைப்பற்ற முயற்சிக்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ‘கெணத்த காணோம்’ இப்படத்தின் கதை.

ராமநாதபுரத்து வட்டார பாஷையை அப்படியே பிரபலித்து நடித்திருக்கிறார்கள் அத்தனை நடிகை, நடிகர்களும்.  இதில், யோகி பாபு மட்டும் விதிவிலக்கு. அவருடைய நடிப்பும் லவ்லின் சந்திரசேகரின் நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், மற்ற அனைத்து துணை நடிகை, நடிகர்களும் அப்படியே ராமநாத புரத்து வட்டார மக்களாக பிரதிபலிக்கிறார்கள். இவர்களது நடிப்பும், அவர்கள் பேசும் வசனங்களும் பல இடங்களில் ரசிக்கும்படி இருக்கிறது.

மூத்தகுடி  மக்களின் வாழ்க்கையையும், அதன் பெருமைகளையும் அகழ்வாராய்வுகளின் மூலம் தெரிந்து கொள்வதை விட, நிகழ் காலத்தில் குடிக்கக்கூட தண்ணீரின்றி வாழும் மக்களின் வலியை உணர்ந்து, அனைத்து வகையிலும் அவர்களின் நிலையை மேம்படுத்துவதே, அடிப்படையானது, சிறந்தது. என்று வலியுறுத்தியிருக்கிறார், இயக்குநர் சுரேஷ் சங்கையா. வி. தியாகராஜனின் ஒளிப்பதிவும், நிவாஸ் கே பிரச்சன்னாவின் பின்னணி இசையும் சிறப்பு.