‘போலீஸ் ஃபேமிலி’–  விமர்சனம்!

ராஜா மலைச்சாமி, ‘பருத்திவீரன்’ சரவணன், நிஷா துபே, சுரேகா, காதல் சுகுமார், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார் ,எம்.எஸ். செல்வா உள்ளிட்ட  பலரது நடிப்பினில் உருவாகியிருக்கும் திரைப்படம், போலீஸ் ஃபேமிலி. பாலு. எம் இயக்கியிருக்கிறார். ஜெயா கே.தாஸ் இசை அமைத்திருக்க, ஜெயகுமார் தங்கவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தினை, ‘ஆன் த டேபிள்’ புரொடக்ஷன்ஸ் சார்பில், ராஜா மலைச்சாமி தயாரித்துள்ளார்.

தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் தாதாவை பழி தீர்க்க முயற்சிக்கும் போலீஸ் கான்ஸ்டபிள். மகனை கொன்றவனை பழி தீர்க்க முயற்சிக்கும் தாதா. இது தான், போலீஸ் ஃபேமிலி படத்தின் கதை.

அரசியல் பலமிக்க, வட சென்னையின் தாதா பருத்தி வீரன் சரவணன். தனது ஒரே மகனுடன் மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இது, அவரின் நெருங்கமான நண்பர்களுக்கும், போலீசாருக்கும் மட்டுமே தெரியும். இந்நிலையில் அவரது மகன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் ஒரு புறமும், சரவணனின் கோஷ்டி ஒரு புறமும் தேடி வருகின்றனர். இதற்கிடையே போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகளை காதலித்ததால் அவமானபடுத்தப்பட்ட  இளைஞர், அவரை பழி தீர்க்க முயற்சிக்கிறார். இவர்கள் அனைவருமே ஒன்றாக சேரும் சூழலில், என்ன நடந்தது? என்பது தான், ‘போலீஸ் ஃபேமிலி’திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

தாதாவிற்கும், காவல் துறைக்கும் நடக்கும் போராட்டம் தான் கதைக்களம். பழிவாங்கும் குணம் கொண்ட ஒரு காவலராலும், அதிகார துஷ் பிரயோகம் செய்யும் காவலராலும் அவர்களின் குடும்பத்தினர் எப்படி பாதிக்கப்படுகிறார்கள். என்பதை கொஞ்சம் சுவாரசியமாக சொல்லியிருக்கிறார்கள்.

இந்த பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கப்பட்டது போல் இல்லை. மேலும் காவல் துறை எப்போதும் காவலர்களுக்கு சாதகமாகவே செயல்படும். கோர்ட் சம்பந்தப்பட்டால் மட்டுமே அவர்களை கைவிடும். போலீஸ் இலாகாவை மிரட்டும் அளவிற்கு எந்த ரௌடியையும் போலீஸ் பார்த்து கொண்டிருப்பது இல்லை. சிம்பிளா ஷூட் அவுட் (என்கவுன்டர்) பண்ணிவிட்டு போய்க்கொண்டே இருக்கும். இது திரைக்கதையில் போதிய நம்கத்தன்மையை கொடுக்கவில்லை. இருந்தாலும் போலீஸூக்கு அறிவுரை சொல்லும் விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தாதா  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தப்பு சரவணனின் அனுபவ மிக்க நடிப்பால் அந்த கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தாலும், அவர் தனது நடிப்பு திறமையைக் காட்ட காட்சிகள் எதுவும் இல்லை. காதல் சுகுமார் போலீஸ் ஏட்டாக நடித்து, திரைக்கதையில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார். இவர்களை போல் ராஜா மலைச்சாமி, நிஷா துபே, சுரேகா, ரோஜன் லியோ, ரத்தினம் போன்றோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை இரண்டும் ஒகேவாக இருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் பாலு. எம் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். படத்தில் ஆங்காங்கே குறைகள் இருந்தாலும், காதல், தந்தை மகள் பாசம், தந்தை மகன் பாசம். போலீஸின் அதிகார துஷ்பிரயோகம். லாக்கப டெத்தினை போலீஸார் மறைக்கும் யுத்தி என அனைத்தையும் கலந்து, கொஞ்சம் சுவாரசியமாகவே கொடுத்துள்ள்னர்.