நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட திரை பிரபலங்கள் பேசியதாவது..,
இயக்குநர் சேரன்,
“இந்த படம் பார்த்து விட்டேன். இதில் நானும் ஒரு கதாபாத்திரமாக தான் உணர்ந்தேன். இப்படியான நல்ல படம் எடுக்க தான் ஒவ்வொரு இயக்குநரும் சென்னையை நோக்கி வரவேண்டும். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் சிறப்பாக உழைத்திருக்கும் இயக்குநர் மீரா கதிரவனுக்கு வாழ்த்துக்கள். இந்தப் படமே ஒரு நாவல் போல உள்ளது. அடுத்த காட்சி என்ன என்பதை யாராலும் கணிக்க முடியாது. வாழ்வியலை, சமூக மாற்றத்தை காட்டியிருக்கும் இந்த மாதிரியான திரைப்படங்கள் தான் நம்மை ஒழுங்குபடுத்தும், உணர வைக்கும். தொழில்நுட்ப குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். விமர்சகர்கள் அனைவரும் நியாயமான விமர்சனம் கொடுக்க வேண்டும். வாழ்த்துக்கள்”.
இயக்குநர் ஜகாரியா முகமது,
“நிறைய தமிழ் படங்களை நான் பார்த்திருக்கிறேன். இது போன்ற படங்கள் வருவது மகிழ்ச்சி. நான் பார்த்து வியந்த பல இயக்குநர்களோடு இந்த மேடையில் இருப்பது பெருமையான தருணம். கேரள திரையரங்குகளிலும் இந்த படம் வெளியாக வேண்டும். நிச்சயமாக எங்கள் ஆதரவு உண்டு. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்”.
இயக்குநர் சுசீந்திரன்,
” எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் கிடையாது. ‘ஹபீபி’ படத்தில் காட்டியுள்ள வாழ்வியலை பார்க்கும் பொழுது பிரம்மிப்பாக இருந்தது. மீரா கதிரவனுக்கும், கஸ்தூரிராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற படமாக இது வந்துள்ளது. வாழ்த்துக்கள்”.
இயக்குநர் லீனா மணிமேகலை,
“மீரா கதிரவனின் பலவருட உழைப்பு தற்போது நனவாவதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது. இந்தப் படம் வீரியமான பண்பாட்டு அசைவு. இது தமிழ் சினிமாவில் நடக்க பல வருடங்கள் ஆகி இருக்கிறது. இது ஒரு இஸ்லாமிய படம் என்பதை விட மூன்று தலைமுறை பெண்களை பற்றிய படம் என சொல்லலாம். அதில் எனக்கு மனநிறைவு. பொருளாதார ரீதியாகவும் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்”.
இயக்குநர் வெற்றிமாறன்,
“‘ஹபீபி’ எனக்கும் முக்கியமான படம். இஸ்லாமிய சமூகத்தினரின் வாழ்வியல், கனவுகள், இழப்புகள், வலிகளை பேசுகிறது. பீரியட் படமாக இருந்தாலும் இப்போதும் பொருத்தி பார்க்க முடிகிறது. அனைத்து நடிகர்களும் கதையில் வாழ்ந்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்”.

இயக்குநர் அமீர்,
” பொதுவாக இஸ்லாமிய சமூகம் திரைப்படங்களை ஒதுக்கி வைக்கும். அப்படியான ஒரு சமூகத்தை பற்றிய படமாக இது வந்திருக்கிறது என்பதை தாண்டி அந்த சமூகத்தை சேர்ந்தவர்களும் நிறைய பேர் இன்று இந்த விழாவில் பங்கெடுத்திருக்கிறார்கள். ஹபீபி என்றால் அன்பு, காதல் என்று அர்த்தம். அப்படியான வாழ்க்கையை வாழ்ந்தவர்களால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த படம் என இதை சுருக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தமிழ் சமூகம் எடுக்க மறந்த ஒரு சமூகத்தை சேர்ந்த படம். இந்திய அரசியலில் இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் தான். ‘வாழை’ திரைப்படத்திற்கு அடுது நான் இத்தனை இயக்குநர்களை சந்தித்திருப்பது இங்குதான். இஸ்லாமிய சமூகத்திற்கான படம் இது என்பதைத் தாண்டி இது தமிழ் சமூகத்திற்கான படம். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் “.
இயக்குநர் மிஷ்கின்,
” இது இஸ்லாமியர்கள் படம் என்று சுருக்குவதில் எனக்கு விருப்பம் இல்லை. எது நல்ல படம், எது கமர்ஷியல் படம், எது பார்க்க வேண்டிய படம் என்ற கேள்வி எனக்கு உண்டு. கருப்பு படம் இப்போது வெளியாகி ஹிட் ஆனது. மகிழ்ச்சி! ‘ஹபீபி’ ஹிட் ஆக வேண்டிய படம். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல காதல் படம் பார்த்து அழுதேன். இந்தப் படத்தை மீரா கதிரவன் தனது தாய் தந்தைக்காக எடுத்திருக்கிறார். யார் என்று தெரியாதவனை நேசிப்பது தான் கருணை. அதை இந்த படம் சொல்லிக் கொடுத்தது. கஸ்தூரி ராஜா சார் தனுஷை விட மூன்று மடங்கு நன்றாக நடித்திருக்கிறார். தேர்ந்தெடுத்து பார்க்க வேண்டிய படம் இது. அனைத்து கடவுள்களும் இந்தப் படத்தை லேசாக்கி தரட்டும்”.
இயக்குநர் கஸ்தூரி ராஜா,
“மீரா கதிரவன் மீது எனக்கு அளவு கடந்த அன்பு உண்டு. அவரை போல ஒரு இயக்குநரை உழைப்பாளியை படைப்பாளியை பார்த்து விடலாம். ஆனால், அவரை போன்ற ஒரு மனிதரை பார்ப்பது அரிது. நான் இதுவரை நடித்ததில்லை. ஆனால் என் மீது மீரா கதிரவன் நம்பிக்கை வைத்தார். நான் ஆயிரம் சதவீதம் இந்து. அப்படி இருந்த என்னை இஸ்லாமியராக மீரா கதிரவன் கதை மாற்றியது. இந்த நிகழ்வு எனக்கு மறுபிறவி போலதான். இந்த படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஏனெனில் என்னை நான் இன்னும் ஒரு நடிகனாக அங்கீகரிக்கவில்லை. அதனால் திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக தான் பார்க்க வேண்டும். இந்த படம் மீரா கதிரவனின் போராட்டத்திற்கு நல்ல விளைச்சல் கொடுக்கும். என் கரியாரில் நான் உயிருள்ளவரை சினிமாவில் இருப்பேன் என்ற நம்பிக்கையை இந்தப் படம் கொடுத்துள்ளது. மண்ணில் பிறந்த அனைவருக்கும் மனிதன் என்ற பெயரே உண்மை. மற்றதெல்லாம் பொய்”.
இயக்குநர் ரஞ்சித்,
“நம் சமூகத்திற்கு பல முகங்கள் உண்டு. ஆனால், யாரைப் பற்றியும் நம் சரியாக புரிந்து கொள்வதில்லை. இங்கு பெரும்பான்மையாக இருப்பவர்களைப் பற்றி நிறைய படங்கள் வந்திருக்கிறது. இலக்கியங்கள் மூலமாகவும் மலையாள சினிமா மூலமாகவும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் இது முக்கியமான படம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்”.

இசையமைப்பாளர் சாம் சி எஸ்,
“வன்முறை நிறைந்த படங்களுக்கு இடையில் மனதை மயிலிறகால் வருடும் இந்த கதைக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. நானும் மீராவும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். ஆனால், இப்போது இருவரும் நல்ல நண்பர்கள். இந்தப் படத்துக்கு பணிபுரிய வாய்ப்பு கொடுத்ததற்கு மீரா கதிரவனுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கஸ்தூரி ராஜாவின் நடிப்பிறகு பெரிய விருது காத்திருக்கிறது”
இயக்குநர் ராம்,
“பல இஸ்லாமிய பெயர்களை ஒரே தமிழ் படத்தில் நீங்கள் பார்க்க இருப்பது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். பச்சைத் தாயத்து இல்லாத, கசாப்பு கடைக்க போகாத, பிரியாணி செய்வது போல காட்டாத ஒரு முஸ்லிம் படம் இது. இஸ்லாமிய சமூகத்தினரை பற்றி நாம் கட்டமைத்து வைத்திருக்கும் பிம்பத்தை எல்லாம் மாற்றக்கூடிய படம்தான் இது. தமிழில் வெளியாக இருக்கும் முதல் அசல் தமிழ் இஸ்லாமிய சினிமா இது. படம் வெற்றியடைய துவா செய்கிறேன்”
இயக்குநர் மீரா கதிரவன்,
“படத்தில் உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்தில் கஸ்தூரி ராஜா சார் நடித்திருக்கிறார் என்று சொன்னதும் பலரும் கேட்டது இஸ்லாமியர்களின் என்றால் சிவப்பாக தானே இருப்பார்கள் என்று. இதுபோன்ற பல பிம்பங்களை இந்த படம் மாற்றும். இந்தப் படத்தை நான் இயக்கவில்லை. அதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறேன். அதைப் போல இந்த படத்திற்கு இன்னொருவரும் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்து என் உண்மையான பெயரை மாற்றி மீரா கதிரவன் என வைத்தபோது பல கேள்விகள் எழுந்தது. என் தாயின் பெயர் தான் மீரா. தமிழ் அடையாளம் வேண்டும் என்பதால் கதிரவன் என வைத்தேன். அக்ரஹாரத்தில் ஐயங்கார் ஒருவர் முகமது யூசுப் கதைக்காக வீடு கொடுத்தார். மதம், சாதியை கடந்து அன்பும் மனிதமும் தான் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது. அப்படியான அன்பை பேசக்கூடிய படம்தான் ‘ஹபீபி’. இந்தப் படம்தான் என்னை இயக்கியது. கஸ்தூரி ராஜா சார் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். படக்குழுவினர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.