1960-களின் காலகட்டத்தில் ஒரு அழுத்தமான பீரியட் க்ரைம் டிராமா (Period Crime Drama) கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் தயாள் பத்மநாபன். ‘2 எம் சினிமாஸ்’ மற்றும் ‘டி பிக்சர்ஸ்’ இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், ஒரு நல்ல சட்டப் போராட்டக் கருவை கையில் எடுத்திருந்தாலும், அதை சுவாரசியமாக கடத்துவதில் முற்றிலும் தடுமாறி, பார்வையாளர்களுக்கு ஒரு அசல் சித்ரவதையாக மாறியுள்ளது.
1960-களின் பின்னணியில் ஒரு வறுமைத் திருடன்படிப்பு இருந்தும் வேலையில்லாமல், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டக் கூட வழியின்றி வறுமையின் கோரப் பிடியில் சிக்குகிறார் புத்திசாலி பட்டதாரியான நாயகன் வெற்றி. வேறு வழியின்றி வாழ்வாதாரத்திற்காகத் திருடத் தொடங்கும் அவர், வறுமை நீங்கியதும் பிரிகிடா சகாவை காதல் திருமணம் செய்கிறார். மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் நிலப் பத்திரத்தை மீட்பதற்காக கவிதா பாரதியின் வீட்டில் ‘கடைசி திருட்டை’ அரங்கேற்றச் செல்கிறார் வெற்றி.
ஆனால், அங்கே நடக்கும் எதிர்பாராத கை கலப்பில் கவிதா பாரதி கொல்லப்பட, குற்ற உணர்ச்சியில் வெற்றி போலீசிடம் தானாக வந்து சரணடைகிறார். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். தூக்கிலிடப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, சிறை வார்டன் ரங்கராஜ் பாண்டேவிடம், ‘தூக்குத் தண்டனையும் ஒரு கொலை தான்’ என நாயகன் விவாதிக்கிறார். அந்த விவாதத்தின் முடிவு என்ன, வெற்றிக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பதை எந்தவிதமான சுவாரசியமோ, விறுவிறுப்போ இல்லாமல் சொல்வது தான் இந்த ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’.
ஒரு க்ரைம் டிராமா மற்றும் நீதிமன்றப் பின்னணி கொண்ட படத்திற்குத் தேவையான எந்தவிதமான சுவாரசியமோ, விறுவிறுப்போ இல்லை. காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்வது பார்வையாளர்களுக்குப் பொறுமைச் சோதனையாக மாறுகிறது. நாடகத்தனமான காட்சிகளும், முதிர்ச்சியில்லாத சிறுபிள்ளைத்தனமான வசனங்களும் படத்தின் ஆகப்பெரும் பலவீனமாக அமைந்துள்ளன.
மிக முக்கியமாக, “தூக்குத்தண்டனை வேணுமா, வேணாமா?” என்பதை இருதரப்பு நியாயங்களையும் அலசாமல், மிகவும் ஒரு சார்பாக மட்டுமே விவாதித்திருக்கிறார்கள். அதனாலேயே இந்தப்படம் பார்வையாளர்களுக்கு எந்தவிதமான உணர்வினையும், தாக்கத்தையும் கடத்தாமல் முடிகிறது.
வழக்கமான ஒன்றிரண்டு முகபாவனைகளுடன் மட்டுமே படம் முழுக்க வலம் வருகிறார் நாயகன் வெற்றி. தூக்கு மேடைக்குச் செல்லும் ஒரு கைதிக்கு உண்டான எந்தவொரு உணர்ச்சியையும், தீவிரமான மன உளைச்சலையும் அவர் வெளிப்படுத்தவில்லை. இயக்குநர் தயாள் பத்மநாபனும் அவரிடம் இருந்து நல்ல நடிப்பை வெளிக்கொண்டு வரப் பெரிதாக முயற்சிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஜெயில் வார்டனாக வரும் ரங்கராஜ் பாண்டேவுக்கு நல்ல ‘ஸ்க்ரீன் பிரசன்ஸ்’ இருக்கிறது. தனக்கே உரிய கணீரென்ற குரலாலும், அழுத்தமான உடல் மொழியாலும் படத்திற்கு ஓரளவிற்கு பலம் சேர்க்கிறார். எனினும், அவருக்கும் வெற்றிக்கும் இடையே சிறையில் நடக்கும் வாத, பிரதிவாதங்கள் அனைத்தும் ஒரு தத்துவ விவாதம் போல இல்லாமல், கேலிக்கூத்தாக முடிந்துள்ளன. நடிப்பதற்கு ஏற்ற அழுத்தமான காட்சிகளும், ஒரு நல்ல இயக்குநரும் கிடைத்தால் ரங்கராஜ் பிரகாசிப்பார்.
மூக்கும் முழியுமாகத் தன் அழகால் ரசிகர்களை வசீகரிக்கிறார் பிரிகிடா சகா. சில காட்சிகள் என்றாலும், தன் இயல்பான திறமையான நடிப்பின் மூலம் இந்த வறட்சியான படத்திலும் பார்வையாளர்களின் மனதில் கொஞ்சம் இடம் பிடித்து விடுகிறார்.
லொள்ளு சபா மாறன், லிஸி ஆண்டனி, கவிதா பாரதி, சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், பலவீனமான பாத்திரப் படைப்பால் யாருடைய நடிப்பும் மனதில் நிற்கவில்லை.
ஒளிப்பதிவு, எம்.வி. பன்னீர்செல்வம். பெரிதாக ஈர்க்கவில்லை. இசை தர்புகா சிவா.
மந்தமான திரைக்கதை, நாடகத்தனமான இயக்கம் எனப் படத்தில் பாராட்டும்படி பெரிதாக எதுவுமே இல்லை. க்ளைமாக்ஸ் காட்சியின் விவாதங்களை இன்னும் ஆழமாக, அழுத்தமான வசனங்களுடன் பேசியிருக்கலாம்.
மொத்தத்தில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ தியேட்டருக்குச் செல்லும் ரசிகர்களுக்கு சோதனை!