‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த பாரி இளவழகன், கமர்ஷியல் மற்றும் காதல் கலந்த குடும்பக் கதையாக எழுதி, இயக்கி, கதாநாயகனாக களமிறங்கியுள்ள திரைப்படம் தான் ‘அன்பே டயானா’.
சென்னை பெரம்பூர் பின்னணியில் வாழும் ஒரு தெலுங்குக் குடும்பம். தனது தாய்மொழி உள்ளிட்ட மற்ற அடையாளங்களைத் தொலைத்துவிட்டு வாழும் அக்குடும்பத்தின் தலைவி ரோஜா செல்வமணி. கணவர் சேத்தன், பிள்ளைகள் இஸ்மத் பானு, பாரி இளவழகன், சுதர்சன் என மொத்த குடும்பத்தையும் தனது கடுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். சொந்த ஜாதியின் மீது அதீத பற்று கொண்ட இவர், ஜாதி சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.இவரது மகன் பாரி, பள்ளிப் படிக்கும் காலத்திலிருந்தே அதே பகுதியில் வாழும் ஆங்கிலோ-இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த ரம்யா ரங்கநாதனை காதலித்து வருகிறார். ஆனால், ரம்யாவோ பாரியின் காதலை ஏற்க மறுத்து, அவரை ஒரு நல்ல நண்பனாக மட்டுமே பாவித்து வருகிறார். கதையின் ஒரு திருப்பத்தில், ரம்யாவிற்கு பாரியின் மீது காதல் மலர்கிறது. ஆனால், எப்போதும் காதலுக்காக ஏங்கிய பாரி, இப்போது தயக்கத்துடன் அதை ஏற்க மறுக்கிறார். அவர் ஏன் மறுக்கிறார்? ரோஜாவின் ஜாதி வெறிக்கு மத்தியில் இவர்களது காதல் என்னவாகிறது? என்பதே ‘அன்பே டயானா’ படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை.
ரம்யா ரங்கநாதன். படத்தின் கதைக்கும், டயானா என்ற கதாபாத்திரத்திற்கும் வெகு பொருத்தமாக அமைந்திருக்கிறார். படம் முழுவதும் குறை சொல்ல முடியாத நடிப்பின் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து விடுகிறார். அந்த கதாபாத்திரத்தை வெகு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் பாரி.
பாரி இளவழகன். மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் தனது அம்மா ரோஜாவிற்கு பயந்து காதலை ஏற்பதா, வேண்டாமா? எனும் குழப்பத்தில் வாழும் அப்பாவி கதாநாயகனாக நடித்துள்ளார். அக்காவிடம் பாசம் காட்டுவதிலும், அப்பாவிடம் உரிமை கோருவதிலும், தம்பியுடன் சண்டையிடுவதிலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
சேத்தன் கடம்பி. எதைப்பற்றியும் கவலைப் படாத தந்தை கதாபாத்திரத்தில் சேத்தன் நடித்துள்ளார். ரோஜாவுடனான ஊடலிலும், கூடலிலும், மகனின் காதலுக்கு ஆதரவாக செயல்படும் காட்சிகளிலும் என மொத்தப்படத்தையும் கலகலப்பாக வைத்திருக்கிறார்.
ரோஜா செல்வமணி. குடும்பத்தின் அதிகார மையமாகவும், ஜாதிப் பற்றுள்ள கண்டிப்பான அம்மாவாகவும் தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
பரிதாபங்கள் கோபி. பெங்களூர் தமிழனாக வந்து சிரிக்க வைக்கிறார். ஆரம்பத்தில் அவர் பேசும் பாஷை ரசிக்க வைத்தாலும், அதன் பின்னர் போரடிக்கிறது. ஆனாலும், அவரது கிளைமாக்ஸ் டிவிஸ்ட் (Twist) சூப்பர்!
ரோஜாவின் தம்பியாக நடித்திருக்கும் செல் முருகன் தியேட்டரில் ரகளை செய்துள்ளார். நிகிலா சங்கர், இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் மிகச் சிறப்பாக நடித்துள்ளனர்.

பெரம்பூர் மக்களின் வாழ்வியலைத் திரையில் கொண்டு வந்ததில் தொழில்நுட்பக் குழுவின் பங்கு அசாத்தியமானது. குறிப்பாக, பெரம்பூரில் பிரசித்தி பெற்ற அடையாளங்களான ஹோட்டல் ஷாலிமார் (Hotel Shalimar), விசாலாட்சி மில்க் சென்டர் (Visalatchi Milk Centre), சிட்டம்மாள் பர்மா கடை (Chittammal Burma Kadai) மற்றும் அங்கு ரயில் நின்று செல்லும் எதார்த்தமான பல இடங்களைக் காட்சிகளில் இடம்பெறச் செய்திருப்பது கதைக்களத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. இதற்காக ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் (Shelly Calist) மற்றும் படத்தின் ஆர்ட் டைரக்டர் (Art Director) இருவருமே தங்களது நேர்த்தியான உழைப்பிற்காகப் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள்.
பரத் சங்கரின் பின்னணி இசை பரவாயில்லை. இருப்பினும், படத்தில் வரும் ‘’விலகாதே’’ பாடல் நன்றாக இருக்கிறது
எழுதி, இயக்கி, நடித்திருக்கும் பாரி இளவழகன், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை சேர்த்திருக்கலாம். பல இடங்களில் தொய்வான திரைக்கதையும், படம் முழுவதுமே மாண்டேஜ் (Montage) பாணியில் செல்வது போன்ற உணர்வைத் தருவதையும் தவிர்த்திருக்கலாம்.
அடையாளங்களை தொலைத்துவிட்ட ஒரு தெலுங்குக் குடும்பம்; மறுபுறம் ஐரோப்பியர்களால் இரண்டாம் தரமாகப் பார்க்கப்பட்ட ஒரு ஆங்கிலோ-இந்தியக் குடும்பம். இந்த இருவேறு பின்னணிகளைக் கொண்ட இவர்களுக்குள்ளான ஜாதி, மத அரசியலை இயக்குநர் இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம். அதை விடுத்து, மிகவும் மேம்போக்காகச் சொல்லிச் சென்றிருப்பது சற்றே ஏமாற்றம் அளிக்கிறது.
ரம்யா ரங்கநாதனின் கச்சிதமான மற்றும் கவரும் நடிப்பு.பாரியின் நேர்த்தியான எதார்த்த நடிப்பு மற்றும் கேரக்டர் டிசைன்.சேத்தன் – ரோஜா காம்போவின் கலகலப்பான குடும்பக் காட்சிகள்.பெரம்பூரின் நிஜமான அடையாளங்களான லொகேஷன்களைப் பயன்படுத்திய விதம்.“விலகாதே” பாடல் மற்றும் கோபியின் கிளைமாக்ஸ் டிவிஸ்ட். ஆகியன ரசிக்க வைக்கிறது.
தொய்வான திரைக்கதை மற்றும் படம் முழுவதும் மாண்டேஜ் பாணியில் நகர்வது.ஜாதி, மத அரசியலை இன்னும் அழுத்தமாகச் சொல்லாமல் மேம்போக்காகக் கையாண்டது.கோபியின் பெங்களூர் தமிழ் நடை பிற்பாதியில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில், ‘அன்பே டயானா’ வலுவான சமூகப் பின்னணியையும், சுவாரசியமான திரைக்கதையையும் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகப் பிணைத்திருந்தால் ஒரு மிகச்சிறந்த படைப்பாக மாறியிருக்கும். எனினும், பெரம்பூரின் எதார்த்தமான சூழல், நடிகர்களின் இயல்பான நடிப்பு மற்றும் கலகலப்பான குடும்பக் காட்சிகளுக்காக தியேட்டரில் ஒருமுறை தாராளமாக ரசிக்கலாம்!