‘அருள்வான்’ – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் விளிம்புநிலை மக்களின் வாழ்வியலையும், அவர்களது அடிப்படை உரிமைகளையும் பேசும் திரைப்படங்கள் எப்போதுமே தனித்துவமான வரவேற்பைப் பெறுபவை. அந்த வரிசையில், ’90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்’ சார்பில் எஸ். ஜி.சரவணன் மற்றும் சுபா சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ‘அருள்வான்’. மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பழங்குடியினரின் அத்தியாவசிய உரிமைகளையும், கல்விக்கான அவசியத்தையும் மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், இயற்கையை அழிக்காமல் அதனுடன் இயைந்து வாழ்ந்து வரும் ‘காடர்’ என்ற பழங்குடியினக் குழுவைச் சுற்றியே இப்படம் நகர்கிறது. காட்டைத் தன் சுயலாபத்திற்காகப் பயன்படுத்த நினைக்கும் வனச்சரகர் (Forest Ranger) ஜான் விஜய்யின் சதியால், அந்தக் காடர் குழுவின் தலைவர் தற்கொலை செய்து கொள்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அந்த மக்களின் தலைவராகப் பொறுப்பேற்கிறார் ஆரவ்.

ஆரவ்விற்கு ஒரு மகள் இருக்கிறாள். வனச்சரகரின் தொடர் சதிகளிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் தங்களை மீட்டெடுக்க ‘படிப்பு’ மட்டுமே ஒரே ஆயுதம் என்பதை, தனது தாத்தாவின் கொடூர மரணத்திற்குப் பிறகு அவர் ஆழமாக உணருகிறார். எப்படியாவது தானும், தன்னுடைய குடியைச் சேர்ந்த மக்களும் கல்வி கற்க வேண்டும் என்று அவர் உறுதியேற்கிறார். ஆனால், காடர் இன மக்களின் சடங்கு சம்பிரதாயங்களும், அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சிகளும் அதற்குப் பெரும் தடைகளாக மாறுகின்றன. அத்தடைகளை எதிர்த்து, அந்த மக்களின் உரிமைக்காகத் தனி ஆளாக மாவட்ட ஆட்சியர் அருள்நிதியைச் சந்திக்க ஆரவ் மகள் முயல்கிறார். அதன் பிறகு அவர்களுக்கு நீதியும், கல்வியும் கிடைத்ததா? என்பதே ‘அருள்வான்’ படத்தின் மீதிக்கதை.

இன்றைய நவீன உலகிலும் பல மலைவாழ் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அவதிப்பட்டு வருவது கண்கூடான உண்மை. அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக அரசு பல நல்ல திட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுத்தாலும், அவை அதிகாரிகள் மட்டத்தில் எவ்வாறு முடக்கப்பட்டு, சாதாரண மக்களைச் சென்றடையாமல் தடைபடுகிறது என்பதைப் படம் பேசுகிறது. தேனி மாவட்ட ஆட்சியர் முத்துவேல் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சவால்கள் மூலம் இந்த எதார்த்தம் சொல்லப்பட்டிருப்பது, பார்ப்பவர்களுக்குக் கடும் வருத்தத்தையும், அந்த மக்கள் மீதான பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது.

ஒருபுறம் அறியாமையாலும், தங்களின் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களினாலும் சுருங்கிப் போய், கல்வி கற்கத் தயங்கும் அப்பாவி மலைவாழ் மக்கள்; மறுபுறம் தங்களுக்குப் பழகாத காட்டு வாழ்க்கையை ஏற்கத் தயங்கி, அங்கு பணியாற்ற மறுக்கும் அரசு அதிகாரிகள் என இரண்டு தரப்பினரின் பக்கமிருக்கும் எதார்த்த சூழலையும், நியாயங்களையும் சரிசமமாகத் திரையில் காட்சிப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. மலைவாழ் மக்களின் நியாயமான அடிப்படை மற்றும் அத்தியாவசிய உரிமைகள் குறித்து இவ்வளவு அழுத்தமாகப் பேசியதற்காக இயக்குநர் கணேஷ் விநாயகனைத் தாராளமாகப் பாராட்டலாம்.

மலைவாழ் மக்களின் உரிமைகளைப் பேசும் நல்ல நோக்கம் கொண்ட கதையாக இருந்தாலும், படத்தின் திரைக்கதையும் காட்சிப்படுத்தலும் ஒரு முழுமையான திரைப்பட உணர்வைத் தராமல், அரைகுறையான ஒரு ஆவணப்படத்தைப் (Documentary) பார்ப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. இதை இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகவும், அழுத்தமாகவும் செய்திருக்கலாம். சமூகத்திற்குத் தேவையான ஒரு மிக முக்கியமான கதையை, சரியான முறையில் திரை வடிவில் ரசிகர்களிடத்தில் கொண்டு செல்வதில் இயக்குநராக கணேஷ் விநாயகன் பெரிதான அக்கறை காட்டவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

மிகையற்ற, குறை சொல்ல முடியாத எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நேர்மையான, கம்பீரமான மாவட்ட ஆட்சியராக வரும் அருள்நிதி, ரசிகர்களைத் தனது நடிப்பால் எளிதில் ஈர்த்துவிடுகிறார். அந்த மக்களுக்காக இவர் செய்யும் தியாகத்தைப் போல் பலரும் செய்ய முன்வந்தால், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையை இக்கதாபாத்திரம் விதைக்கிறது.
ஆரவ் – ரம்யா பாண்டியனின் மகளாக நடித்திருக்கும் பேபி கிருத்திகாவின் நடிப்பு மிகவும் சிறப்பு! தன் அசாத்திய நடிப்பால் ஒட்டுமொத்தப் படத்தினையும் தன் தோள்களில் தாங்கி நிற்கிறார்.
ரம்யா பாண்டியன் ஆரவ்வின் மனைவியாக வந்து, தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் குறை சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியான நடிப்பைத் தந்துள்ளார்.

காடர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ் இளைஞராக நடித்திருக்கும் ஆரவ், கதாபாத்திரத்திற்குத் தேவையான தீவிரத்தைக் காட்டத் தவறியதால், ரசிகர்களிடையே ஒட்டாமலே வந்து செல்கிறார்.
பத்திரிகையாளராக வரும் காளிவெங்கெட். இவரது கதாபாத்திரம் அந்த மலைவாழ் மக்களுக்கும் எந்தப் பிரயோஜனமுமில்லை, படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கும் எந்தப் பங்களிப்பையும் அளிக்கவில்லை.
ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், அருள்தாஸ் மற்றும் ஹரிஷ் உத்தமன் ஆகியோர் தங்களின் கதாபாத்திரங்களுக்குத் தேவையான உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

‘அருள்வான்’ திரைப்படம் மலைவாழ் மக்களின் கல்வி மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பேச எடுத்துக்கொண்ட முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், ஆவணப்படப் பாணியில் நகரும் பலவீனமான திரைக்கதை படத்திற்குப் பெரும் பின்னடைவாக மாறுகிறது. எனினும், அருள்நிதி மற்றும் பேபி கிருத்திகாவின் சிறப்பான நடிப்பிற்காகவும், அது பேசும் உன்னதமான சமூகக் கருத்திற்காகவும் இத்திரைப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.