‘லெனின் பாண்டியன்’ – விமர்சனம்!
Dharshan Ganesan and Gangai Amaran Excel in a Gritty Drama Against Sand Mafia
இயக்குநர் டி.டி. பாலச்சந்திரன் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ (Lenin Pandiyan) திரைப்படம், கிராமப்புறப் பின்னணியில் நடக்கும் மணல் மாபியாவிற்கு எதிரான எளிய மக்களின் போராட்டத்தையும், நேர்மையான அதிகாரிகளின் வாழ்வியலையும் எதார்த்தமாகப் பேசுகிறது.
கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளரும் நடிகருமான சிவாஜி ராம்குமாரின் மகனும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனுமான தர்ஷன் கணேசன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். மேலும் ஷ்ரித்தாராவ், அர்ச்சனா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன், சுப்பு பஞ்சு, சரவண சுப்பையா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதைக்களம் காதல் திருமணம் செய்து கொண்டு, வாரிசு அடிப்படையில் போலீஸ் வேலையில் சேரும் தர்ஷன் கணேசனைச் சுற்றி நகர்கிறது. உடலளவில் பலமில்லாத காரணத்தால் போலீஸ் ஸ்டேஷனில் ஒவ்வொரு நாளும் அவர் அவமானப்பட்டு வருகிறார். மற்றொரு புறம், குழந்தை இல்லாமல் வாழ்ந்து வரும் கங்கை அமரனும் ரோஜாவும் தங்களது குழந்தையாகப் பாவித்து ஒரு ஆட்டினை வளர்த்து வருகின்றனர். அந்த ஆடு மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும், யுகேந்திரனுக்கு சொந்தமான லாரியில் அடிபட்டுப் பரிதாபமாகச் சாகிறது. இதனால், கங்கை அமரன் யுகேந்திரன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கிறார். அதை வாங்க மறுக்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கெட் அவரை அடித்து அவமானப்படுத்துகிறார். இதனைத் தொடர்ந்து, கங்கை அமரன் அந்த ஊரின் நேர்மையான வி.ஏ.ஓ அர்ச்சனாவிடம் ஆடு மற்றும் மணல் கொள்ளை குறித்து முறையிடுகிறார். அவருக்குச் சட்ட ரீதியான உதவிகளைச் செய்து கொடுத்ததால் அர்ச்சனா கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். இதனால், கோர்ட் கங்கை அமரனுக்குப் பாதுகாப்பு கொடுக்க போலீஸ்காரர் தர்ஷனை நியமிக்கிறது. இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ‘லெனின் பாண்டியன்’ படத்தின் மீதிக்கதையாகும்.
லெனின் பாண்டியன், படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் டி.டி. பாலச்சந்திரன், முதல் பாதியை எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் மிக நேர்த்தியாக இயக்கி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, மிகப்பெரும் பலம் பொருந்திய மணல் மாஃபியாக்களை அவர் திரையில் சித்தரித்த விதம் மிக நிஜமாக அமைந்துள்ளது.

நடிப்பைப் பொறுத்தவரை, கங்கை அமரனின் நடிப்பு ரசிகர்களால் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்து வாரிசாக வந்துள்ள தர்ஷன் கணேசனுக்கு இதுதான் முதல் படம் என்றாலும், அவருடைய தோற்றமும் நடிப்பும், வாரிசு அடிப்படையில் வேலைக்குச் சேரும் போலீஸ்காரர் கதாபாத்திரத்திற்கு வெகுவாகப் பொருந்திக்கொள்கிறது.
கங்கை அமரனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரோஜாவின் நடிப்பு பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கவில்லை.
ஒரு சில காட்சிகளில் வந்தாலும் வி.ஏ.ஓ வாக நடித்திருக்கும் அர்ச்சனாவின் நடிப்பு பாராட்டும்படி உள்ளது. மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக வரும் சரவண சுப்பையா, போஸ் வெங்கட் இருவரும் கனக்கச்சிதமாக நடித்துள்ளனர். வில்லன்களாக வரும் ஆடுகளம் நரேன் மற்றும் யுகேந்திரன் போன்றோரும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நீதிபதியாக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான் அனைவரின் மனதிலும் இடம்பிடித்து விடுகிறார். நீதிமன்றக் காட்சிகளில் அவர் பேசும் வசனங்கள் தியேட்டரில் பலத்த கைத்தட்டல்களைப் பெறுகின்றன.
ஏ.எம். எட்வின் சகாயின் ஒளிப்பதிவும், இசைஞானி இளையராஜாவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கின்றன. இருப்பினும், படத்தில் சில முக்கியப் பலவீனங்களும் இருக்கவே செய்கின்றன. இயக்குநர் முதல் பாதியை நேர்த்தியாகக் கொண்டு சென்றாலும், இரண்டாம் பாதி பெரும் தடுமாற்றத்துடனும், நேர்த்தியற்ற ஒரு க்ளைமாக்ஸுடனும் முடிவடைவது படத்திற்குப் பலவீனமாக மாறுகிறது.
கங்கை அமரன் மற்றும் ரோஜா சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் பழைய ‘முதல் மரியாதை’ படத்தின் பி.ஜி.எம்–ஐ (பின்னணி இசை) பயன்படுத்தியிருப்பது, திரையரங்கில் பார்வையாளர்கள் மத்தியில் கேலிப்பொருளாக மாறிப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில மேக்கிங் மற்றும் திரைக்கதை தொய்வுகள் இருந்தாலும், மணல் கொள்ளையின் நிஜ முகத்தைக் காட்டியுள்ள விதத்தில் ‘லெனின் பாண்டியன்‘ திரைப்படம் தமிழ் சினிமாவில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு படைப்பாக மாறுகிறது.