மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!
First Single ‘IGNORE’ from K. Manikandan’s ‘Makkal Kaavalan’ Out Now!
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் அதிரடித் திரைப்படம் ‘மக்கள் காவலன்’ (Makkal Kaavalan). நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி, இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் ‘இக்னோர்’ (IGNORE) எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ‘தமிழ் ஹிப் ஹாப்பின் தந்தை’ என அழைக்கப்படும் மலேசிய ராப்பர் யோகி பி (Yogi B), நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர் மற்றும் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். பாடலாசிரியர் எம்.கே. பாலாஜி எழுதியுள்ள இப்பாடல், ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் ஒரு காவல்துறை அதிகாரியின் மன உறுதியையும், வலியிலிருந்து மீண்டெழும் எழுச்சியையும் பேசும் அதிரடி ராப் பாடலாக உருவாகியுள்ளது.
ராப் இசையுடன் நாட்டுப்புறச் சடங்கு மரபு இசையும், ‘பறை’ இசையின் முழக்கமும் இணைந்து பாடலுக்குக் கூடுதல் வீரியத்தையும் துணிச்சலையும் அளித்துள்ளன. இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதன், ஊழல்கள் நிறைந்த அமைப்பால் ‘சரணடைதல்’ அல்லது ‘எதிர்த்து நிற்றல்’ என்ற இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். உயிர் வாழ்வதற்கான அவனது தனிப்பட்ட போராட்டம், காலப்போக்கில் அவனை மக்களின் காவலனாக எப்படி மாற்றுகிறது என்பதே இப்படத்தின் கதைக்களமாகும். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படம், வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.