‘மெட்டா சினிமா’ பாணியில் உருவாகும் ‘ஜெயில் மேட்ஸ்’!

South India’s First Meta-Cinema Film ‘Jail Mates’ by K.P. Jegan Wraps Up Production!

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கிய K.P. ஜெகன் இயக்கி, முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates). தென்னிந்திய சினிமாவில் முதன்முறையாக ‘மெட்டா சினிமா’ (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், இயக்குநர் ஜெகன் தனியாகத் தன்னுடைய நிஜப் பெயரிலேயே நடித்துள்ளார். 2017-ம் ஆண்டு இவரது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதார்த்தமான நகைச்சுவையும் த்ரில்லர் அம்சங்களும் கலந்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் மற்றொரு கதாநாயகனாக விஜய் வர்மா நடிக்க, அவருக்கு ஜோடியாக சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், வீரசமர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் சிவனடியார் கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன், கார்த்திக் நேத்தா, திரைவண்ணன் மற்றும் சக்தி உமா பாலகிருஷ்ணா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். இதில் தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ள மனதை உருக்கும் ஆன்மீகப் பாடல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது.

முழுவதும் திருச்செந்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் பாதி, பெரும்பாலும் இயற்கையாகப் பெய்த மழையிலேயே படமாக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன், தங்களது நிறுவனங்கள் மூலம் படத்தை வெளியிட முன்வந்துள்ளனர். படத்தின் இசை மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.