பாடகர் மனோ மகன் ஷாகிர் மனோ நாயகனாக அறிமுகமாகும் ‘மௌன மொழிகள்’பட இசை வெளியீட்டு விழா!
Thol. Thirumavalavan Praises Small-Budget Films and Tamil Titles
ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’. பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் அர்ச்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 27-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன்,
“‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தரைப் பாராட்டுகிறேன். பிரபல பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டுமின்றி, சமூக மாற்றத்திலும் அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும். காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன். சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதும் ஊக்கப்படுத்துவதும் எங்களைப் போன்றவர்களின் பொறுப்பு” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
பி. வேலுமணி இணைத் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.சி. சௌந்தர் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதி இயக்கியுள்ளார். நள இளந்திரையன் இசையமைக்க, எம்.ஜி. ராய் ஒளிப்பதிவும், சேது ரமணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். டான் பாலா கலை இயக்கத்தையும், ஓம் பிரகாஷ் சண்டைப் பயிற்சியையும் கவனிக்க, வரும் நவம்பர் 27-ம் தேதி ‘மௌன மொழிகள்’ திரைக்கு வருகிறது.