அம்புநாடு ஒன்பது குப்பம் – விமர்சனம்!

பி.கே.பிலிம்ஸ் சார்பில், பூபதிகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம், ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’. கதையின் நாயகனாக சங்ககிரி மாணிக்கம், நாயகியாக ஹர்சஷிதா நடித்திருக்க இவர்களுடன்  பிரபுமாணிக்கம், மதன் ரமேஷ் மித்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அம்புநாடு ஒன்பது குப்பம், துரை.குணா எழுதிய, ‘ஊரார் வரைந்த ஓவியம்’ எனும்  நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவினை ஒ.மகேஷ் அமைத்திருக்க, இசையமைத்திருக்கிறார், அந்தோனிதாசன். பிண்ணனி இசையை ஜேம்ஸ் வசந்தன் அமைத்திருக்கிறார்.எடிட்டிங் பன்னீர் செல்வம். கடல்வேந்தன் திரை கதை அமைத்திருக்க இயக்கியிருக்கிறார், ராஜாஜி.

இரண்டு சமூகங்களில் நடக்கும் ஜாதிய ஒடுக்கு முறை பற்றிய விழிப்புணர்வு படமாக உருவாக்கப்பட்டுள்ள ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’  முக்கியமான படம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று வரை இருக்கும் ஒன்பது நாட்டு ஊர் தலைவர்களை பற்றி படம் பேசுவது குறிப்பிடத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பின் தங்கிய கிராமம். இங்கு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஊர்த்திருவிழா வழக்கமபோல் நடக்கிறது. அந்த திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில், ஆதிக்க சாதியினருக்கு இடையே பகை மூழ்கிறது. இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு, தன் நண்பர்கள் உடன் வந்த பட்டியல் இனத்தை சேர்ந்த  அந்த கிராமத்து இளைஞர், கோவில் பூசாரி கயில் இருக்கும் தாம்பூலத்தட்டினை தொட்டு விபூதி எடுத்து விடுகிறார். இதனால் தீட்டு ஏற்பட்டதாக அந்த கிராமம் பரபரப்பு அடைகிறது. அதை தொடர்ந்து, அங்கு கலவரம் ஏற்படுகிறது.  ஆதிக்க சாதியினர், யாருக்கு முதல் மரியாதை என்பதை விட்டு விட்டு, அந்த இளைஞரை தீர்த்துகட்ட முடிவு செய்கின்றனர். இதன் பின்னர் என்ன நடந்தது? என்பதை, மிகைப்படுத்தாமல் சொல்லியிருப்பதே ‘அம்புநாடு ஒன்பது குப்பம்’ படத்தின் கதை.

ஒரு சிறிய பட்ஜெட்டில், எந்த அளவுக்கு நியாயமாக எடுக்கமுடியுமோ அந்த அளவிற்கு நேர்மையாக வே படமாக்கியிருக்கிறார்கள். இன்றைய அரசியல் கள நிலவரத்தையும், அதனால் கிடைக்கக்கூடிய உரிமைகள், ஒருபோதும் ஒடுக்கப்பட்டவர்களை சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் ஆதிக்க சாதியினர் எப்படி செயல்படுகிறார்கள், என்பதை வெட்ட வெளிச்சம் ஆக்கியிருக்கிறார்கள். குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறி விடக்கூடாது என்பதிலும், இவர்களுக்கு அரசியல் ரீதியாக கிடைக்கும் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சி செயல்பாடு குறித்தும் எடுத்துக் கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்றனர்.

நடிகர், நடிகைகளை பொறுத்தவரை, அனைவரும் புதுமுகங்கள், அவர்களுக்கு இன்னும் பயிற்சி வேண்டும். கிடைத்த பொருளாதார வசதிகளை கொண்டு படமாக்கியிருக்கிறார்கள். சமூக ரீதியிலான பெரிய மாற்றங்களை உருவாக்க இந்த மாதிரியான படங்கள் அவ்வப்போடு வரவேண்டும்.

மொத்தத்தில், அரசியல் ரீதியிலான நிரந்தரமான தீர்வினை பெறுவதற்கு, பின் தங்கிய இளைஞர்களை விழித்துக்கொள்ளச் செய்யும் படம்!