செவ்வாய்க்கிழமை – விமர்சனம்!

பாயல் ராஜ்புத், நந்திதா ஸ்வேதா, ஶ்ரீ தேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்‌ஷ்மன் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியுள்ள தெலுங்கு படம், மங்களவாரம். இப்படம் செவ்வாய்க்கிழமை என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இப்படத்தினை ‘ஆர் எக்ஸ் 100’ என்ற தெலுங்கு படத்தினை இயக்கியிருந்த, அஜய் பூபதி இப்படத்தினை இயக்கியிருக்கிறார்.

ஜமீந்தாரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமம். அந்த கிராமத்தில் உள்ள கள்ளக்காதல் ஜோடிகளின் பெயரினை, கிராமத்து சுவற்றில் எழுதி வைக்கின்றனர். அதை பார்க்கும் அந்த ஜோடியினர் மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்த மர்ம மரணத்தினை துப்பு துலக்குவதற்கு, சப் இன்ஸ்பெக்டர் நந்திதா ஸ்வேதா அந்த கிரமத்திற்கு வருகிறார். நந்திதா ஸ்வேதா மர்ம மரணத்திற்கான காரணத்தினை கண்டுபிடிக்கும் போது, பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவருகின்றன. அவை என்ன? என்பதே, செவ்வாய்க்கிழமை படத்தின் திரைக்கதை.

இயக்குனர் அஜய் பூபதி, பெண்களின் அதிகப்படியான (Nymphomaniac) பாலியல் உணர்வினை மையப்படுத்தி, ஒரு துணிச்சலான படத்தினை கொடுத்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்கு துணிச்சலான நடிப்பினை கொடுத்துள்ளார், பாயல் ராஜ்புத். கல்லூரி விரிவுரையாளர் அஜ்மல் அமீரின் காதல் வலையில் விழுந்து, அவருடன் இணைவது. அதன் பின்னர் கட்டுப்பாடற்ற அதீத பாலியல் உணர்வினை தீர்த்துக்கொள்ள எல்லோரிடமும் இணைவது, பாலியல் உணர்வினை கட்டுப்படுத்த, ரப்பர் பேண்டை கை மணிக்கட்டில் கட்டிக்கொண்டு, தன்னைத்தானே அடித்து கொள்ளும் காட்சியிலும், சிறப்பான நடிப்பினை கொடுத்துள்ளார். அதன் மூலம் அவர் மேல் ஒரு பரிதாபத்தினையும் ஏற்படுத்தி விடுகிறார்.

கொலைகளுக்கு காரணம் பேயா, சாமியா, மனிதனா என யூகிக்க முடியாமல் திரைக்கதை அமைத்து க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது, இயக்குனரின் வெற்றி.

பெண், சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் கரடு முரடாக வருகிறார், நந்திதா ஸ்வேதா. பாரட்டும்படி நடித்திருக்கிறார்.

க்ளைமாக்ஸில் திவ்யா பிள்ளையின் கதாபாத்திரமும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

தசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் அஜனீஷ்ன் பின்னணி இசையும் படத்தின் பலம்.

படத்தில் நடித்த அனைவரும் அவரவர் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

மொத்தத்தில், தமிழை விட, தெலுங்கு மொழியில் பார்த்தால் நன்றாக இருக்கும்.