‘அந்தரன்’ – விமர்சனம்!

பிரஜின், இவானா வருண், அதிரன், அனுபமா குமார், செந்தி, பத்மென், படத்தின்  தயாரிப்பாளார் எம் கே சாம்பசிவம் மற்றும் பலரது நடிப்பினில் வெளிவந்திருக்கும் திரைப்படம், அந்தரன். இத்திரைப்படத்தினை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் எம் கே சாம்பசிவம் தயாரித்திருக்க, சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்க,  ஹரி எஸ். ஆர் இசையமைத்துள்ளார்.

எம் கே சாம்பசிவத்தின் மகள் இவானா அருண். ஒரே மகளான இவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். கொஞ்சம் சாதிப்பற்று கொண்ட இவானாவின் தந்தை பலரது காதலை பிரித்திருக்கிறார். இவானாவின் பின்னால் சுத்தும் இளைஞர்களை அடித்து விரட்டுகிறார். இவானா காதலில் விழுகிறார். அதனைத் தொடர்ந்து இவானா காதலிக்கும் பையன் கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதன் பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலில் வேறு ஒருவருடன் இவானாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. சில நாட்களில் இவானாவிற்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை விபத்தில் இறக்கிறார். அடுத்த திருமண ஏற்பாடு நடக்கிறது. அந்த மாப்பிள்ளை தற்கொலை செய்து கொள்கிறார்.  இவானாவுக்கு நிச்சயிக்கப்பட்டவர்கள் மர்மமான முறையில் இறப்பதால் போலீசார் விசாரணையில் இறங்குகின்றனர். இந்த மரண சம்பவங்களை விசாரிக்கும் காவல் துறை அதிகாரி பிரஜின், இவானாவை விரும்புகிறார். பிரஜின் என்ன ஆனார்? என்பது தான், அந்தரன் படத்தின் கதை!

பிரஜின் காவல்துறை அதிகாரியாக அலட்டிக்கொள்ளாமல் கம்பீரமாக நடித்திருக்கிறார். அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இடம்பெறும் அனைத்து காட்சிகளிலும் நன்றாக நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் நெருங்கும் காட்சிகளில் அவரது நடிப்பு திரைக்கதையை சுவாரசியமாக செல்ல வைக்கிறது. கொலையாளியை கண்டுபிடித்தவுடன் அவர் திகைப்படைவைதைப் போலவே ரசிகர்களும் திகைப்படைவது நிச்சயம். புதிதான கதைக்கரு! இயக்குநரை இதற்காகவே பாராட்டலாம்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில், தாநாயகியாக நடித்திருக்கும் இவானா வருண், அந்த கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் எம்.கே.சாம்பசிவம், அம்மாவாக நடித்திருக்கும் செந்தி ,  டாக்டராக அனுபமா குமார், அதிரன், ரமேஷ்பாபு கீதா, பத்மன், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன் என அவரவர் இருப்பினை பதிவு செய்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கிஷோர் ராமச்சந்திரன், காட்சிகளை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார். ஹரி.எஸ்.ஆர் இசையமைப்பில் பாடல்கள் ரசிக்கும்படியும், காட்சிகளின் விறுவிறுப்பை கூட்டுவதுமாக  அமைந்திருக்கிறது. எழுதி இயக்கியிருக்கும் சந்தோஷ் ராவணன், வித்தியாசமான கதைக்கருவுடன் யூகிக்க முடியாத ஒரு மர்டர் மிஸ்ட்ரியை கொடுத்திருக்கிறார்.

‘அந்தரன்’ –  வித்தியாசமான மர்டர் மிஸ்ட்ரி