கிராமிய தெருக்கூத்து நாடக கலைஞர் வைபவ். இவர் ‘பபூன்’ வேடமிட்டு நடித்து வருபவர். வருடம் முழுவது வேலை இல்லாத காரணத்தால், கூத்து கட்டுவதை நிறுத்திவிட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்க, அவரது நண்பர் ஆத்தங்குடி இளையாராஜாவுடன் திட்டமிடுகிறார்.
வைபவ்வும், இளையராஜாவும் வெளிநாட்டுக்கு போவதற்கு ஆகும் செலவிற்காக மூணாறு ரமேஷின் உதவியுடன் இறால் பண்ணையில் வேலைக்கு சேருகிறார்கள். வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே உப்புடன் பல கோடி ரூபாய் போதை பொருளை கடத்தியதாக கைது செய்யப்படுகின்றனர். வேண்டுமென்றே ‘போதை பொருள்’ கடத்தலில் சிக்கவைக்கப்பட்டதாக எண்ணும் அவர்கள் போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்கிறார்கள். ஒருபுறம் போலீஸூம் மறுபுறம் ரௌடிகளும் அவர்களை விரட்டுகிறது.
இந்நிலையில் இலங்கை தமிழ்ப் பெண்ணான அனகா, அவர்களுக்கு உதவ முன் வருகிறார். இதனால், அனகாவும் போலீஸில் சிக்குகிறார். இந்த சிக்கல்களிலிருந்து மூவரும் தப்பித்தார்களா? இல்லையா? என்பது தான் ‘பபூன்’ படத்தின் கதை.
வைபவ், தெருக்கூத்து நாடகத்தின் பபூனாக வித்தியாசமான வேடத்தில் நடித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். குறை சொல்லமுடியாத நடிப்பு. வைபவின் நண்பராக நடித்துள்ள (கிராமியப் பாடகர்) ஆத்தங்குடி இளையராஜாவுக்கு நடிப்பதற்கு பெரிதும் சிரமப்படவில்லை. சில இடங்களில் கலகலப்பு ஊட்டுகிறார்.
இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்திருக்கிறார், நாயகி அனகா. வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கதாபாத்திரப் படைப்பு!
‘டான்’ ஆக நடித்திருக்கும் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தனது பார்வையிலேயே சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் அதற்கேற்ற காட்சியமைப்புகள் இல்லை!
போதை பொருள் தடுப்புப் பிரிவின் எஸ்.பியாக நடித்துள்ள இயக்குநர் தமிழ், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி காவல் துறை எப்படி ஏவல் துறையாக செயல்படுகிறது என்பதனை அழகாக சுட்டிக்காட்டியுள்ளார். அதிலும் ஆளும்கட்சி எம்.எல்.ஏவை முதலமைச்சர் பெயரைச்சொல்லி ஓடவிட்டு நக்கல் செய்வது சூப்பர்!
அமைச்சராக நடித்திருக்கும் ‘ஆடுகளம்’நரேன் சூப்பர்..
கடற்கரை பகுதிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் தினேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.
இலங்கைத் தமிழர்கள் என்றாலே குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் என்று சித்தரித்துள்ளது சரியா, இயக்குனரே!
பபூன் – ரசிக்கவும் வைக்கவில்லை! சிரிக்கவும் வைக்கவில்லை!