‘நாய் சேகர்’ : விமர்சனம்!

ஜார்ஜ் மரியன் விலங்குகளின் டி.என்.ஏ வை மறுஉருவாக்கம் செய்து மனிதர்களின் டி.என்.ஏவுடன் பொருந்திப் போக வைக்கும் ஆராய்ச்சியை செய்து வரும் விஞ்ஞானி. பல வருடங்களாக ஒரு நாயிடம் மனித குணத்தினை கொண்டுவர முயற்சி செய்துவரும் நிலையில், அந்த நாய் சதீஷை கடித்து விடுகிறது. இதனால் இருவருடைய உடலுக்குள்ளும் ஏற்படும் மாற்றத்தினால் சதீஷ் நாய் குணத்துடனும், நாய் மனித குணத்துடனும் மாறிவிடுகிறது. இதனால் சதீஷூக்கு பல சங்கடங்கள் ஏற்படுகிறது. இதுவே ‘நாய் சேகர்’ படத்தின் கதை.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் சதிஷ், அவரது வழக்கமான காமெடி மூலமாக மனம் கவர்கிறார். அவர், நாய் போல் ஷேஷ்டைகள் செய்யும் காட்சிகளில் குழந்தைகளை நிச்சயமாக மகிழ்விப்பார். அலுவலகத்தில் நாயைப்போல் சேஷ்டைகள் செய்து அவமானப்படும் காட்சிகளில் உருகவும் வைத்துவிடுகிறார். நாய்க்கு குரல் கொடுத்திருக்கிறார் மிர்ச்சி சிவா. நன்றாக இருக்கிறது.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி, விஞ்ஞானி வேடத்தில் நடித்திருக்கும் ஜார்ஜ் மரியன், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், கு.ஞானசம்மந்தம், மனோபாலா என அனைவரும் சிரிக்க வைக்கிறார்கள்.

கேங்ஸ்டராக நடித்திருக்கும் இசையமைப்பாளர் சங்கர் (கணேஷ்), அவரது வலது கையாக வரும் ‘லொள்ளு சபா’ மாறன் இருவருமே போட்டி போட்டு சிரிக்க வைக்கிறார்கள்.

எல்லோரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படத்தினை இயக்கியிருக்கும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

படம் பார்ப்பவர்களின் மேலே விழுந்து கடிக்காமல் ‘நாய் சேகர்’ கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்!