‘காடுவெட்டி’ –  விமர்சனம்!

‘சாமிப்புள்ள’ என்று தன்னுடைய சாதி மக்களால் அழைக்கப்படுபவர், காடுவெட்டி படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ். தன்னுடைய சாதிப்பெண்களை திட்டமிட்டு ‘காதல்’ என்ற பெயரால், கபளீகரம் செய்பவர்களையும், செய்யத்தூண்டியவர்களையும் வேரறுப்பதுவே, காடுவெட்டி படத்தின் கதை திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘காடுவெட்டி’ படத்தில் இருவேறு சாதியினருக்கு இடையே நடக்கும் சம்பவத்தினை, பூடகமாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும், அது அப்பட்டமாகவே தெரிகிறது.

‘தெருக்கூத்து’ கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலிக்கிறார். இதனால், ஊர்காரர்கள் ஒன்று கூடி, அந்தப்பெண்ணை கொலை சேயும் படி நிர்பந்திக்கிறார்கள். பெற்ற மகளை கொலை செய்ய முடியாமல் தவிக்கும் சுப்பிரமணிய சிவா,  ஊர்காரர்களுக்குத் தெரியாமல், தன்னுடைய மகள் காதலித்த பையனுடன் சேர்த்து வைக்கிறார். ஆனால், மகளை காதலித்த பையன், தன் சாதித்தலைவன் தூண்டுதலின் மூலமாக காதலித்தது ஏமாற்றியிருப்பது தெரிய வருகிறது.

இதனால், சுப்பிரமணிய சிவா, சாமிப்புள்ள ஆர் கே சுரேஷின் உதவியை நாடுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, காடுவெட்டி படத்தின் கதை.

‘சாமிப்புள்ள’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ், கதாபாத்திரத்திற்கான மிகச்சிறந்த தேர்வு. பெண்களுக்கான துணிச்சலையும், தன்னம்பிக்கையை ஊட்டி பேசும் வசனங்கள் ‘அனைத்து சாதியினருக்குமானது’ இதற்காக இயக்குநரை பாராட்டலாம். அநியாயங்களை கண்டு வெகுண்டெழும் சண்டைகாட்சிகளில் அனல் தெறிக்கிறது.

‘தெருக்கூத்து’ கலைஞராக நடித்திருக்கும் சுப்பிரமணி சிவா, சாதியால் பெற்ற பிள்ளைகளை பறிகொடுக்கும், பரிதாப  பெற்றோர்களை கண்முன் நிறுத்துகிறார்.

மற்றபடி ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா பாண்டிலட்சுமி, விஷ்மயா விஷ்வாந்த், சாந்தி மாறன், சுப்பிரமணியம், அகிலன், சுபாஷ் சந்திரபோஸ், ஜெயம் எஸ்.கே,கோபி, சங்கீர்த்தனா விபின் ஆகிய்யொரும் தங்களுக்கான கதாபாத்திர்ங்களில் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

எம்.புகழேந்தியின் ஒளிப்பதிவும், ‘வணக்கம் தமிழா’ சாதிக்கின் இசையும் ஓகே.

நாடகக் காதலை மையக்கருவாக கொண்டு கதை, திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கும் இயக்குநர் சோலை ஆறுமுகம், ஆதிக்க சாதியினரால் மட்டும் நடப்பதில்லை. என்பதை வேறு ஒரு கோணத்தில் சொல்லியிருக்கிறார். அது வட தமிழ்நாட்டில் வசிப்பவர்களுக்கு பகீர் கிளப்பும்!

‘காடுவெட்டி’ அரசியல் ஆணவக்கொலை!