‘ஸ்டுடியோ கிரீன்’ சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் கங்குவா. சூர்யா, இரட்டை வேடங்களில் நடித்திருக்க, அவருடன் கார்த்தி, பாபி தியோல், திஷா பதானி, யோகிபாபு, நட்டி, கருணாஸ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார், கலை ராணி, போஸ் வெங்கட், ரெடின் கிங்ஸ்லி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தினை, எழுதி இயக்கியிருக்கிறார், இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா .
வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கலை இயக்கம் மிலன். எடிட்டிங் நிஷாத் யூசுப்.
கங்குவா தமிழ்த் திரைப்படம் திரைப்படம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. 2D, 3D, Imax உள்ளிட்ட தொழில் நுட்பங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
1070 களில், ஐந்து தீவுகளை உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பினை, ரோமானியர்கள் கைப்பற்ற நினைப்பதும், அதனைத் தொடர்ந்து நடக்கும் படையெடுப்பினை கதையாக கொண்டு, அதில் லவ், சென்டிமென்ட், ரிவெஞ்ச் இத்யாதிகளின் மூலம் திரைக்கதையாகவும் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதே கங்குவா.
ரெகுலர் கமர்ஷியல் படங்களை இயக்கிய இயக்குநரிடமிருந்து இப்படியொரு படமா? என ஆச்சர்யபட வைக்கிறது. இயக்குநர் சிவாவின் கற்பனைக்கு, தொழில்நுட்பம் முடிந்தவரை கை கொடுத்திருக்கிறது. முழுக்க முழுக்க தொழில் நுட்பத்தின் துணையை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், காட்சிகளால் பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும், சினிமா பார்ப்பவர்களை கவருவதற்கு, நல்ல ஒரு டிராமா தேவை. அது இந்தப்படத்தில் மிஸ்ஸிங்க்!
சூர்யா, கங்குவாவாகவும், ஃபிரான்ஸிஸ் ஆகவும் இரண்டு கதாபாத்திரங்களில், வித்தியாசம் காட்டி, மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். சமகாலத்தில் ஃபிரான்ஸிஸ் கதாபாத்திரத்தில் திஷா பதானியுடன் அடிக்கும் லூட்டி 2K இளைஞர்களுக்கானது. கங்குவா கதாபாத்திரம் வயது வித்தியாசமின்றி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து விடுகிறது. படத்தில் அதிக காட்சிகளில் நடித்த சூர்யா, ஒவ்வொரு காட்சிகளிலும் பிரம்மாண்டம் காட்டுகிறார்.
தீஷா பதானி, 2K இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
சமகாலத்தில் தோன்றும் சூர்யா, திஷாபதானி, யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி, கே.எஸ் ரவிக்குமார் ஆகியோரின் காட்சிகள் ரெகுலர் கமர்ஷியல் சினிமா.
நட்டி, கருணாஸ், கோவை சரளா, கலை ராணி,போஸ் வெங்கட், பிரேம்குமார் உள்ளிட்ட நடிகர் நடிகைகளின் காட்சிகள் பிரமிக்க வைக்கும் தொன்மை காலத்திய காட்சிகள், பிரமிக்கச்செய்கின்றன.
கங்குவாவின் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியாக, க்ளைமாக்ஸில் கார்த்தியின் வருகை ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பினை உருவாக்குகிறது.
ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமியின் உழைப்பு அபாரமானது. பிரமிக்க வைக்கும் காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இசையமைத்திருக்கலாம்.
ஆடை வடிவமைப்பாளர்கள் அனுவர்தன், தட்ஷா பிள்ளை ஆகியோர் இயக்குநர் சிவாவின் கற்பனைக்கு உயிர் கொடுத்துள்ளனர்.
சுப்ரீம் சுந்தரின் சண்டைப்பயிற்சியில், போர்க்காட்சிகளில் பயத்தினை உருவாக்குகிறது. சிறப்பான சண்டை அமைப்பு.
படத்தின் மொத்த ஆதாரமே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தான். மிரட்டுகிறது.
3D, தொழில்நுட்பக் காட்சிகள் சிறுவர், சிறுமிகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். அநேக காட்சிகள் 3D தொழில்நுட்பத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக சிறுவர்கள் ரசிப்பார்கள்.
படத்தின் பெரிய குறை, படம் பார்ப்பவர்களை ஈர்க்கும் திரைக்கதை இல்லாதது தான்.
மொத்தத்தில், கங்குவா “3D’’ ரசிகர்களை கவரும்!