‘என்ன விலை’ திரைப்படம் 25 ஆண்டுகாலக் காத்திருப்பு… நடிகர் கருணாஸ் உருக்கம்!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நகைச்சுவை, அழுத்தமான குணச்சித்திரம் மற்றும் எதார்த்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது அசாத்திய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் நடிகர் கருணாஸ். அவர் தனது திரையுலகப் பயணத்தில் கால் நூற்றாண்டை (25 ஆண்டுகள்) வெற்றிகரமாக நிறைவு செய்யும் இந்த சந்தோஷமான தருணத்தில், அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் வரும் செப்டம்பர் 17-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் அவரது ஒட்டுமொத்தக் கலைப்பயணத்திலும் ஒரு மிக முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

‘என்ன விலை’ திரைப்படத்தை  கலாமயா சினிவெர்ஸ் (Kalamaya Cineverse) நிறுவனத்தின் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். தேசிய விருது பெற்ற பிரபல திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி இயக்கியுள்ளார்.

அடிமட்டச் சாதாரண மனிதர்களின் எதார்த்தமான வாழ்க்கை, அவர்களின் தினசரிப் போராட்டங்கள், சுயமரியாதை மற்றும் அசைக்க முடியாத வாழ்வியல் நம்பிக்கை ஆகியவற்றைப் பற்றி  ஆழமாகப் பேசும் ‘என்ன விலை’ திரைப்படம், ஏற்கனவே பல்வேறு புகழ்பெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் (International Film Festivals) அதிகாரப்பூர்வமாகத் திரையிடப்பட்டு உலகளாவிய விமர்சகர்களின் பாராட்டுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘என்ன விலை’ படத்தின் கதைக்களத்திற்கு வலு சேர்க்கும் வகையில்  கருணாஸுடன் நிமிஷா சஜயன், விஜயலட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சித்தா தர்ஷன், மோகன் ராம், சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ். கவி, சுவாமிநாதன், தீபா சங்கர் மற்றும் கவி நக்கலைட்ஸ் உள்ளிட்ட ஒரு மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் களம் இறங்கியுள்ளது.

ஒளிப்பதிவாளர் அல்பி ஆண்டனி (Alby Antony) தனது கேமரா கோணங்களால் எதார்த்தமான வாழ்வியலைப் படம்பிடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் சாம் சி.எஸ். (Sam C.S.) படத்தின் பாடல்களையும், பின்னணி இசையையும் உணர்வுப்பூர்வமாக வடிவமைத்துள்ளார். படத்தொகுப்பு & ஒலி வடிவமைப்பு: ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புப் (Editing) பணிகளையும், புகழ்பெற்ற தபஸ் நாயக் ஒலி வடிவமைப்புப் (Sound Design) பணிகளையும் கவனித்துள்ளனர்.

‘என்ன விலை’ திரைப்படம் குறித்துப் பேசிய நடிகர் கருணாஸ்,

“தமிழ்த்திரையுலகில் நான் நுழைந்து வெற்றிகரமாக 25 ஆண்டுகள் நிறைவடையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்குக் கிடைத்திருப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த கால் நூற்றாண்டாக இப்படியொரு அழுத்தமான வாழ்வியல் கதைக்காகவும், இவ்வளவு நேர்மையானதொரு அசாத்திய படக்குழுவிற்காகவும் நான் தவம் கிடந்து காத்திருந்தேன். விருதுகள் கலைஞர்களுக்குக் கூடுதல் ஊக்கமளித்தாலும், இறுதியில் ஒரு திரைப்படம் என்பது அடித்தட்டு மக்களுக்கானது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இக்கதை பொதுவான பார்வையாளர்களின் மனதை ஆழமாகத் தொடும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.