செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான யோகி பாபுவுக்கு சட்டப்படி ஒரு மகனும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு மகனும் இருக்கின்றனர். ஒரே பள்ளியில் படித்து வரும் இவர்கள், தங்களது அப்பாவைப்போல் அரசியல்வாதியாக விரும்புகின்றனர். இதனால், பள்ளியில் நடைபெறும் ‘ஸ்கூல் பீப்பிள் லீடர்’ தேர்தல் முதலே, தங்களது அரசியலை நடத்த ஆரம்பித்து விடுகின்றனர். இவர்களது எண்ணம் ஜெயித்ததா, இல்லையா? என்பது தான், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.
குழந்தைகள் முன்னேற்றக் கழகம் படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சில காட்சிகள், நிஜமான அரசியல் தலைவர்களாக, நமக்கு பரிச்சயமான காட்சிகளாக தோன்றுகிறது. கதையின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சிறுவர்களான இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் ஆகிய இருவருக்கும் வயதை மீறிய காட்சியமைப்புகள் இருக்கிறது. அதனால் காட்சிகள் நமக்கு அந்நியப்பட்டு இருக்கின்றன. ஆனாலும் அவர்களது கான்ஃபிடன்ட் நடிப்பு ஆச்சர்ய படுத்துகிறது. யோகி பாபுவை முன்னிருத்தி படம் உருவாகியிருந்தாலும் சிறுவர்களே பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறுகின்றனர். யோகி பாபு வழக்கம் போல், தனது பஞ்சரான ‘பஞ்ச்’ டைலாக்குகளால் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். ஆனால் சிரிப்பு மட்டும் வரவேயில்லை.
நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடித்துள்ளார். அவர் பேசும் சில டைலாக்குகள் நடப்பு அரசியலை கண்முன் நிறுத்துகிறது.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் வந்து போகிறார்கள்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார்!.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவு ஓகே!
எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள், தமிழக அரசியலை தனது கற்பனை கலந்து, வித்தியாசமான பாணியில் சிறுவர்கள் மூலமாக, காமெடியாக சொல்ல நினைத்திருக்கிறார். ஆனால் காமெடி சுத்தமாக இல்லை. யோகிபாபு காமெடிகளும் பெரிதாக ஈர்க்கவில்லை!
மொத்தத்தில், ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’. சொல்ல எதுவுமில்லை!