லால் சிங் சத்தா – விமர்சனம்!

அமீர் கான்,  கரீனா கபூர்,  நாக சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அத்வைத் சந்தன்  திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் படம், ‘ லால் சிங் சத்தா’. இது  பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) என்ற ஆங்கில படத்தின் மறு உருவாக்கம். எதிர்ப்பும், ஆதரவும் சமநிலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில் வெளியாகியிருக்கும் ‘லால் சிங் சத்தா’ எப்படி இருக்கிறது.

போதிய புத்திசாலித்தனம் இல்லாத அமீர் கான், தனது காதலி கரீனா கபூரை சந்திக்க ரயிலில் பயணம் செய்கிறார். அப்போது சக பயணிகளிடம் தனது வாழ்வில் சிறு வயதிலிருந்து நடந்த முக்கியமான சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறார். அப்படி அவர் பகிர்ந்து கொள்ளும் சம்பவங்கள் பல, நமக்கும் பலவிதமான உணர்வுகளை கொடுக்கிறது..

லால் சிங் சத்தா, கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள அமீர் கான் அவரது நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். நடை, உடை, பாவனைகளுடன், தனது பெரிய கண்களை அகல விரித்து அவர் காட்டும் ரியாக்‌ஷன்கள் கதாபாத்திரத்தின் மீதான ஈர்ப்பினை உறுதிபடுத்துகிறது. பாலிவுட்டை ஆட்டிப்படைத்து வரும் மிகப்பெரிய நடிகர் கதாபாத்திரத்திற்கான தோற்றத்தினை மாற்றியிருப்பது அவருக்கு புதிதாக இல்லை என்றாலும், ரசிகர்களுக்கு பிரமிப்பு தான்.

அமீர்கான் கரீனா கபூரிடம் ‘என்னைய கல்யாணம் பண்ணிக்கிறியா’ என கேட்கும் காட்சியும், ‘உன் பையன் அப்பா பேரும் லால் சிங் சத்தாவா’ என கேட்கும் காட்சியுமே போதும், உச்சம் தொட்ட அவரது நடிப்பிற்கு உதாரணம்!

மாடல் அழகி ரூபா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கரீனா கபூர், குறை சொல்லமுடியாத நடிப்பு! ராணுவ வீரராக நடித்திருக்கும் நாக.சைதன்யா, அமீர் கானின் அம்மாவாக நடித்திருக்கும் மோனா சிங் உள்ளிட்டவர்களும் கவனிக்கத்தக்க படி நடித்துள்ளனர்.

ஒரே சீனில் கிராபிக்ஸ் உதவியுடன் நடித்திருக்கும் ஷாருக்கான் சிம்ப்ளி சூப்பர்!

லால் சிங் சத்தாவின் வாழ்க்கைப் பயணத்தில் உலக நாடுகளால் கரும்புள்ளி என கருத்து பதிவிடப்பட்ட இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி முதல் இந்திராகாந்தி கொலை, பாபர் மசுதி இடிப்பு, கார்கில் போர், மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல் வரை பல சம்பவங்களை மிகநுட்பமான முறையில் திரைக்கதை படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

கார்கில் போரில் காயமடைந்த எதிரி இந்தியாவில் வசிப்பதும், ராணுவச்சேர்க்கையில் உள்ள நடைமுறைகளையும் தெளிவாக சொல்லியிருக்கலாம்.

தனுஜ் டிக்குவின் பின்னணி இசையும், சத்யஜித் பாண்டேவின் ஒளிப்பதிவும் மிக பிரம்மாதம்.

க்ளைமாக்ஸ், சோகத்தை கொடுத்தாலும் ‘லால் சிங் சத்தா’ – வின் ரயில் பயணம் இனிமையாகவே இருக்கிறது!