‘மழையில் நனைகிறேன்’ – விமர்சனம்!

Mazaiyil Nanaigiren Movie Review :

Cast : Anson Paul, Reba John, Mathew Varghese, Anupama Kumar, Kishore Rajkumar, Shankar Guru Raja, Vetrivel Raja

Direction : T.Suresh Kumar

Music  : Vishnu Prasad

Production : Rajshree Ventures – Sreevidhya Rajesh & B. Rajesh Kumar.

ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் சார்பில், ஸ்ரீவித்யா ராஜேஷ், பி. ராஜேஷ்குமார் ஆகியோரது தயாரிப்பில், அன்சன் பால், ரெபா ஜான் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், கிஷோர் ராஜ்குமார், சங்கர்குரு ராஜா, வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார், டி சுரேஷ்குமார். ஒளிப்பதிவு  ஜெ. கல்யாண், இசை விஷ்ணு பிரசாத்.

கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த, டிகிரி முடிக்காமல் வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் நாயகன் அன்சன் பால், பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசு. இந்து குடும்பத்தை சேர்ந்த, கல்லூரி மேற்படிப்பினை அமெரிக்காவில் படிக்க விரும்பும், நாயகி ரெபா ஜானை கண்டதும் காதல் கொள்கிறார். முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார், ரெபா ஜான். சில நாட்களுக்கு பிறகு, இருவரும் ஒரே பைக்கில் செல்ல நேர்கிறது. அப்போது நடக்கும் ஒரு விபத்தில் கோமா நிலைக்கு செல்கிறார், ரெபா ஜான். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான், மழையில் நனைகிறேன்’ படத்தின் கதை.

‘ஆபிரகாமின்டே சந்தாதிகள்’ என்ற மலையாளப் படத்தில், மம்முட்டியுடன் இணைந்து நடித்ததன் மூலமாக திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் அன்சல் பால். ‘மழையில் நனைகிறேன்’ தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். எதை பற்றியும் கவலைப்படாத, ஜாலியான பணக்கார வீட்டு பையனாக அவரது கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார். ரெபா ஜானை சுற்றி வந்து தனது காதலை ஏற்க வைப்பதற்காக முயற்சிக்கும் காட்சிகளில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

அதேபோல் நாயகியாக நடித்திருக்கும் ரெபா ஜான், கொடுத்த வேலையை குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

மற்றபடி, நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்யூ வர்கீஸ், அம்மாவாக நடித்திருக்கும் அனுபமா குமார், நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சங்கர் குரு ராஜா, நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும்  கிஷோர் ராஜ்குமார், வெற்றிவேல் ராஜா ஆகியோர் அவர்களது பங்கிற்கு நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. அதிலும் ஹரிச்சரண் – ஶ்ரீவித்யா ராஜேஷ் பாடிய ‘உன் காதல் பார்வை’ பாடல், மறுபடி மறுபடியும் கேட்கும் பாடலாக இருக்கிறது. பின்னணி இசை கூட பரவாயில்லை!

வித்தியாசமான ஒளிப்பதிவு கோணங்களால், கலர்ஃபுல்லாக படமாக்கியிருக்கிறார், ஒளிப்பதிவாளர் ஜெ.கல்யாண்.

கதை எழுதி இயக்கியிருக்கும் டி.சுரேஷ் குமார், காதலர்கள் ஒன்று சேர்வார்களா? என எதிர்பார்க்க வைத்தாலும், யூகிக்கும்படி இருப்பதால் ஏமாற்றம் தருகிறது. பல படங்களில் ரசித்த காட்சிகளே அதிகம் என்பதால் சோர்வாக இருக்கிறது.

மற்றபடி, ‘மழையில் நனைகிறேன்’ ஒரு ஆவரேஜான படம்!