Nesippaya Review
Directed by : Vishnuvardhan
Written by : Vishnuvardhan, Neelan Sekar
Produced by : S.Xavier Britto & Sneha Britto (Co-Producer)
Starring : Akash Murali, Aditi Shankar, Kushboo, Sarathkumar, Prabhu, Kalki Koechlin, Raja
Cinematography : Cameron Eric Bryson
Edited by : A. Sreekar Prasad
Music by : Yuvan Shankar Raja
Production : XB Film Creators
பல வெற்றிப் படங்களில் நடித்த, தமிழ்த்திரையுலகின் முன்னணி கதாநாயகன் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி, கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம், ‘நேசிப்பாயா’.
ஸ்டைலிஷான, முன்னணி இயக்குநர்களில் விஷ்ணுவர்தன் முக்கியமானவர். இவர் இயக்கி, அஜித் நடித்த ‘பில்லா’, ‘ஆரம்பம்’ இரண்டு படங்களுமே பெரும் வரவேற்பு பெற்ற படங்கள். இவரது இயக்கத்தில் உருவான அனைத்து படங்களுக்குமே ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெற்ற படங்கள். அதன் காரணமாக இவர் இயக்கிய ‘நேசிப்பாயா’ படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்திருக்கிறதா?
நாயகி அதிதி ஷங்கரின் அழகில் மயங்கும் ஆகாஷ் முரளி, அவர் மீது காதல் கொள்கிறார். முதலில் மறுக்கும் அதிதி ஷங்கர், ஆகாஷ் முரளியின் நீண்ட துரத்தலுக்கு பிறகு சம்மதிக்கிறார். இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் திளைக்கிறார்கள். இந்நிலையில், அதிதி ஷங்கர் வேலை செய்யும் நிறுவனம், அவரை போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்ல தேர்ந்தெடுக்கிறது. போர்ச்சுக்கல் செல்ல முன்னெடுக்கும் நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தங்களது காதலை பரஸ்பரம் முறித்துக் கொள்கின்றனர்.
வருடங்கள் கடந்த நிலையில், போர்ச்சுக்கல் சென்ற அதிதி ஷங்கர், வேறு ஒருவரை காதலித்தாகவும், அதன் தொடர்ச்சியாக ஒரு கொலை குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்படுகிறார். இது குறித்த செய்திகள், ஆகாஷ் முரளிக்கு தெரிய வருகிறது. இதனால், தனது முன்னாள் காதலி அதிதி ஷங்கரை காப்பாற்றுவதற்காக, ஆகாஷ் முரளி போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்கிறார். அங்கு, அவரைக் காப்பாற்றினாரா?, இல்லையா? என்பதை, தனது வழக்கமான ஸ்டைலிஷான திரைக்கதை மூலம் படமாக்கியிருக்கிறார், இயக்குநர் விஷ்ணு வர்தன்.
நாயகன் ஆகாஷ் முரளி, ஆறடி உயரத்தில் அம்சமாக இருக்கிறார். அவரது தோற்றத்திற்கேற்றபடி கதை அமைந்திருப்பதால், அந்த கதாபாத்திரத்திற்குள் தன்னை கச்சிதமாக நிலை நிறுத்திக்கொள்கிறார். நாயகி அதிதி ஷங்கரை விரட்டி, விரட்டிக் காதலிப்பது, பாடல் காட்சிகளில் நடனம், ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி, பைக் சேசிங், காதலியிடன் உருகுவது என, அனைத்திலும் ஈடுபாட்டுடன் நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்திருக்கிறார். குறிப்பாக, ஜெயிலில் அதிதி ஷங்கரை சந்தித்து உருகும் காட்சியில் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகியாக அதிதி ஷங்கர். இவர் நடிப்பதற்கு ஏகப்பட்ட காட்சிகள். அனைத்திலும் தன்னுடைய இருப்பினை வலுவாக பதிவு செய்திருக்கிறார். கல்லூரி மாணவியாக வசீகரிப்பவர், காதல் வாழ்க்கையையும் திர்கால லட்சிய வாழ்க்கையையும் பக்குவமாக கையாளும் முதிர்ந்த பெண்ணாகவும் இருவேறுபட்ட நடிப்பில், எளிதாக ஸ்கோர் செய்து விடுகிறார். ஆகாஷ் முரளியுடன் ஏற்படும் பிரேக்கப் காட்சியிலும், ஜெயில் காட்சிகளிலும் தனிச்சிறந்த நடிப்பினை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், ‘’அவன் எனக்காக என்னவேணும்னாலும் செய்வான்.’’ என, ஆகாஷ் முரளியை நினைத்து உருகும் காட்சி ஹைலைட்டான காட்சி.
சரத்குமார், குஷ்பு, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் இவர்கள் கதாபாத்திரத்திற்கேற்றபடி நன்றாக நடித்திருந்தாலும், ‘குஷ்பு’ சூப்பராக நடித்திருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் பலம். பாடல்கள் கேட்கும்படியாக இருக்கிறது. சில பாடல்கள் திரும்பத் திரும்ப கேட்கலாம். பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு காட்சிகளுக்கு விறுவிறுப்பு சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரைசனின் ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகள், ஹாலிவுட் படங்களின் பாணியில் இருக்கிறது.
சில காட்சிகளை நீக்கினால் படத்திற்கு எந்த பாதிப்புமில்லை. என்ற போதிலும் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர்பிரசாத் அதை நீக்காமல் விட்டிருக்கிறார்.
2 கே கிட்ஸ்களின் காதல், ஈகோவால் ஏற்படும் பிரிவு, இவை முதல் பாதியாகவும், ஆக்ஷன், சஸ்பென்ஸ், டிவிஸ்ட் என இரண்டாம் பாதியாகவும் தனது ஸ்டைலிஷான, கமர்ஷியல் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார், இயக்குநர் விஷ்ணு வர்தன்.
திரைப்படம் துவங்கியவுடன், ரொமேன்ஸ் கலாட்டாவாக நிதானமாக பயணிக்கும் திரைக்கதை, அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை, யூகிக்க முடியாத டிவிட்ஸ்டுகளுன் படம் முடிகிறது.
மொத்தத்தில், ‘நேசிப்பாயா’ பார்க்கக்கூடிய படம்.