‘தருணம்’ –  விமர்சனம்!  

கொலையை மறைக்க, தடயங்களை உருவாக்கும் துணை ராணுவ அதிகாரி!

Tharunam Movie Review

‘ZHEN STUDIOS’ சார்பில், தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் தயாரித்து, ‘தேஜாவு’ படப்புகழ் இயக்குநர் அர்விந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், தருணம். இதில், கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பால சரவணன், கீதா கைலாசம் ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி, இசை – தர்புகா சிவா, பிண்ணனி இசை – அஸ்வின் ஹேமந்த், படத்தொகுப்பு – அருள் இ.சித்தார்த், கலை இயக்கம் – வர்ணாலயா ஜெகதீசன், பத்திரிகை தொடர்பு – சதிஷ், சதிஷ் குமார், சிவா (AIM), சண்டை இயக்கம் – Stunner சாம், இணை தயாரிப்பு – ஆர்கா எண்டர்டெய்ன்மெண்ட்ஸ்.

கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவருக்கும் திருமணம்  செய்து வைக்க, அவரது பெற்றோர்களால் முடிவு செய்யப்படுகிறது. இவர்களது நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முதல் நாளில், ஸ்ம்ருதி வெங்கட் ஒருவரை கொலை செய்து விடுகிறார். அந்த கொலையை மறைக்க இருவரும் திட்டமிடுகிறார்கள். ஸ்ம்ருதி வெங்கட் ஏன் கொலை செய்கிறார்? திட்டமிட்டபடி கொலையை அவர்களால் மறைக்க முடிந்ததா, இல்லையா? என்பதே ‘தருணம்’ படத்தின் திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!

‘தருணம்’ என்பது தமிழ்ச் சொல்லாக இல்லாமல், வட சொல்லாக இருந்தாலும் கதைக்கு வெகு பொருத்தமான தலைப்பு. மிகச்சரியான வேளையில், கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் இருவரும் பிணத்தை அப்புறப் படுத்தும் நேரத்தையே தருணம் என்ற சொல் குறிக்கிறது.

கிஷன் தாஸ், துணை ராணுவத்தில் பணிபுரியும் வீரராக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து, தன்னால் முடிந்தவரை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் ரொமேன்ஸ் செய்கிறார். வில்லன்களுடன் அடிதடியும் செய்கிறார். இன்னும் கூட சிறப்பாக நடித்திருக்கலாம்.

ஸ்ம்ருதி வெங்கட், கிஷன் தாஸ் மற்றும் ராஜ் அய்யப்பாவுடனான காட்சிகளில் குறிப்பிடும்படி நடித்திருக்கிறார். அப்பாவித்தனமாகவும், வில்லத்தனமாகவும் இரண்டு மாறுபட்ட நடிப்பினை கொடுத்திருக்கிறார்.

கிஷன் தாஸ் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், சிரிப்பு மூட்ட முயற்சித்திருக்கிறார்.

கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி இருவரும் கவனம் பெறுகிறார்.

ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவும், அஸ்வின் ஹேமந்தின் பிண்ணனி இசையும் ஓகே.

தர்புகா சிவாவின் இசையில், ‘எனை நீங்காதே’ பாடல் மறுபடியும் கேட்கத்தோன்றும் பாடலாக இருக்கிறது.

முதல் பகுதி மெதுவாகவும், விறுவிறுப்பில்லாமல் நகர்கிறது. ஆனால், இரண்டாம் பகுதி விறுவிறுப்பாக, அடுத்தடுத்து யூகிக்க முடியாமல், க்ளைமாக்ஸில் டிவிஸ்ட் கொடுத்து ஆச்சர்யபடுத்துகிறார், இயக்குநர் அர்விந்த் ஶ்ரீனிவாசன். ஆனால், திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி, லாஜிக் மீறல்களை கவனமுடன் கையாண்டிருந்தால் ஒரு சிறப்பான க்ரைம் த்ரில்லர் படமாக அமைந்திருக்கும்.

மற்றபடி ஒட்டு மொத்தமாக பார்த்தால், தருணம் பார்க்கக்கூடிய ஒரு ஆவரேஜான படம்.