‘சினம் கொள்’ : விமர்சனம்!

‘ஸ்கை மேஜிக்  பிக்சர்ஸ்’, ‘பாக்யலட்சுமி டாக்கீஸ்’ ஆகிய இரு  நிறுவனங்களின்  சார்பில்  ராஜா குலசிங்கம்,பாக்யலட்சுமி வெங்கடேஷ், கரிகாலன், காயத்ரி ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சினம் கொள்’.  இப்படம் தமிழ் ஈழ மக்களின் தற்போதைய நிலைமையினை எடுத்து சொல்லும் விதமாக உருவாகியுள்ளது. இயக்குநர் ரஞ்சித் ஜோசப் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் அரவிந்தன், நற்வினி டெரி ரவிஷங்கர், லீலாவதி, சிந்தர் அதித், மதுமதி, பிரேம், தீபா செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

‘சினம் கொள்’  யாரை சினம் கொள்ள செய்கிறது பார்க்கலாம்.

1950 களில் சிங்கள தீவரவாத செயற்பாட்டாளர்களால் ‘இலங்கை’ சிங்களர்களுக்கே என்ற கொள்கை முன்னெடுக்கப்பட்டு பின்னர் இலங்கை அரசால் அது தீவிரப்படுத்தப்பட்டது. அதிலிருந்து ஈழத் தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து ‘இனப்படுகொலை’ செய்யப்பட்டு வந்தனர். இந்த இனப்படுகொலைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ்த் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் இலங்கை உள்நாட்டு போர் நடந்தது.  இந்த உள்நாட்டுப் போர் மே 17 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசும், சில நாடுகளும் செய்த சதித் திட்டத்தின் மூலம் தமிழ்த் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதில் பல பலலட்சக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

மேலும் இதில் காணாமல் போன லட்சகணக்கானவர்களின் நிலை என்ன ஆனது என்பது இன்றுவரை தெரியாமலேயே இருக்கிறது. இந்த உள் நாட்டுப்போரின் போது கைது செய்யப்பட்ட போராளிகள் பல வருட சிறைவாசத்திற்கு பின்னர்  விடுதலையான சில நாட்களிலிலேயே மர்மமான முறையில் உயரிழந்தும் வருகின்றனர். எஞ்சிய மக்களின் சொத்துக்களை அபகரித்துள்ளது சிங்கள பேரினவாத அரசு.

இந்த சம்பவங்களை ‘சினம் கொள்’ படத்தின் மூலம். வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சித்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

கதாநாயகனாக நடித்திருக்கும் அரவிந்தன் சிவஞானம், படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்துள்ளார். உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என நினைத்து மனைவியைத்தேடி அவர் அலையும் போது நாமும் சேர்ந்து தவிக்கிறோம். (நிஜ வாழ்க்கையில் இன்னும் இவரைப்போல் பலர் தேடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்)

அதோடு தன்னை சுற்றிப் பின்னப்பட்ட வலையில் இருந்து மீள்வதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் போராளிக்களுக்கான கம்பீரம் சேர்ந்த நேர்மை.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கிறார் நற்வினி டெரி ரவிஷங்கர்.  கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வு.

இவர்களைப் போலவே படத்தில் நடித்திருக்கும் லீலாவதி, பிரேம், தீபச் செல்வன், தனஞ்செயன் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற பொருத்தமான தேர்வு.

படத்தின் முக்கியமான அம்சங்களாக இருப்பது எம்.ஆர்.பழனிகுமாரின் ஒளிப்பதிவும், என்.ஆர்.ரகுநந்தனின் இசையமைப்பும் தான். இலங்கைத் தமிழர்கள் தாயக பிரதேசமாக கருதும் இலங்கையின் வட-கிழக்கு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளை அழகாக படம்பிடித்துள்ளனர். சில நொடிகளில் காண்பிக்கப்படும் ‘தமிழ்த் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் வீட்டினை பார்க்கும் போது புல்லரிக்கிறது.

தீபச் செல்வனின் வசனங்கள் பல இடங்களில் போராளிகளுக்கு கௌரவம் சேர்த்துள்ளது. அதேபோல் தமிழ் மக்களின் வாழ்வியல் அவலங்களையும் அழுத்தமாக பதிவு செய்கிறது.

மக்களுக்காக போராடிய போராளிகளின் எஞ்சிய வாழ்க்கையினை ஒரு கமர்ஷியல் படத்திற்கான அம்சங்களுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித் ஜோசப்.

‘சினம் கொள்’  சிந்திக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.

‘சினம் கொள்’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ‘ஈழம் பிளே’  (  https://eelamplay.com ) என்ற இனைய தளத்தில் காணலாம்.