‘அனந்தன் காடு’ – விமர்சனம்!

முரளி கோபி கதை, திரைக்கதை எழுதி, ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம், ‘அனந்தன் காடு’. இதில் ஆர்யா, நிகிலா விமல், முரளி கோபி , ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரென்ஜி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யுத்குமார், சரத் அப்பானி, விஜயராகவன் நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். எஸ். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். வினோத்குமார் தயாரித்துள்ளார்.

இனவெறி காரணமாக இலங்கை அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தமிழ்ப்போராளிகள் ஆயுதமேந்தி போராடி வரும் 90களில் கதை நிகழ்கிறது. போராளியான ஆர்யாவின் கண்முன்னே அவரது தங்கை கற்பழித்து கொலை செய்யப்படுவதுடன், தாயும் சுட்டுக்கொல்லப்படுகிறார். சண்டை தீவிரமடைய, ராணுவத்துடனான சண்டைக்கு பிறகு, கேரளாவில் இருக்கும் கூலிப்படையினரின் உதவியுடன் அங்கே தஞ்சமடைகிறார். அதன் பிறகு கேரள மாநில முதல்வருக்காக, கூலிப்படையினருடன் இணைந்து தமிழகத்தில் உள்ள ஒரு முக்கிய புள்ளியை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஏன் எதற்கு? என்பதே ‘அனந்தன் காடு’.

தழீழப்போராளிகளின் போராட்டத்தை கொச்சைபடுத்துவதும் அதை மடைமாற்றும் வேலையை அன்று முதல் இன்றுவரை திட்டமிட்டே பலர் செய்து வருகின்றனர். அப்படியான ஒரு படைப்பே ‘அனந்தன் காடு’ என்ற திரைப்படம்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்யா ஓகேவான நடிப்பினை கொடுத்துள்ளார். நடிப்பதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை. ஆக்‌ஷனில் மட்டும் கவனம் பெறுகிறார். கூலிப்படை குழுவினராக நடித்திருக்கும் முரளி கோபி, தேவ் மோகன், இந்திரன்ஸ் மற்றும் அப்பானி சரத் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் சுனில், கேரள முதல்வராக நடித்திருக்கும் விஜயராகவன், சாந்தி பாலச்சந்திரன், ரெஜினா கசாண்டரா, ஜெயின் பவுல், நிகிலா விமல், அச்யூத் குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா, பின்னணி இசை பி.அஜனீஸ் லோக்நாத்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் முரளி கோபி, சசிகுமார் பாணியிலான கதையை சில சம்பவங்கள் கலந்து சொல்லியிருக்கிறார். ஜியென் கிருஷ்ணகுமார் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். ஆனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்துள்ளார்.