முதலமைச்சராக அவதாரம் எடுத்த ஹெச். ராஜா! அமெரிக்க மருத்துவர் இயக்கத்தில் ‘செய்! செய்யாதே!’ அப்டேட்!

இன்றைய நவீன காலகட்டத்து இளம் தலைமுறையினருக்குச் சமகாலச் சமூகப் பொறுப்புணர்வையும், விழிப்புணர்வையும் அழுத்தமாகச் சொல்லும் நோக்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘செய்! செய்யாதே!’. இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, கோலிவுட்டின் முன்னணி திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முக்கியச் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக அரங்கேறியுள்ளது.

இவ்விழாவில் திரையிடப்பட்ட இப்படத்தின் துள்ளலான பாடல்களும், விறுவிறுப்பு நிறைந்த அதிகாரப்பூர்வ டிரெய்லரும் அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டு மழையைப் பெற்று வருகிறது. இன்றைய அவசர உலகத்தில் இளைஞர்களுக்குத் தேவையான மிக முக்கியமான சமூகப் பொறுப்புணர்வை மையக்கருத்தாகக் கொண்டு இப்படம் செதுக்கப்பட்டுள்ளதால், தியேட்டர்களில் ரிலீசாகும் போது இது இளம் தலைமுறையினரின் மனங்களில் ஒரு சிறந்த நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வந்திருந்த பிரபலங்கள் மேடையில் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்,

இத்திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்புக் குழுவினருமான ராஜா அவர்களைப் பாராட்டினார். தங்களுடன் நீண்ட காலம் அரசியல் பயணத்தில் இருந்த ஒருவர், இன்று திரைத்துறைக்கு வந்து ஒரு சமூகப் பொறுப்புள்ள திரைப்படத்தை உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் படம் முழுவதும் மதுரையை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். மதுரையுடன் எனக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உண்டு. எனது தந்தை எனக்கு ‘தமிழிசை’ என்று பெயர் வைத்ததே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்தான். அதனால் மதுரை என்றாலே எனக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட பாசம் இருக்கிறது” என்று அசைபோட்டார். மேலும், மருத்துவம் சார்ந்த ஒரு முக்கியமான சமூகக் கருத்தை, மருத்துவ விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய இப்படத்தின் இயக்குநரும் அமெரிக்க வாழ் மருத்துவருமான டாக்டர் எஸ். ராஜா,

இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவர்களின் பரிந்துரை இன்றி தாங்களாகவே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடும் சுயமருந்து உட்கொள்ளுதல் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளைப் பற்றி இப்படம் ஆழமாகப் பேசுகிறது என்றார். இத்திரைப்படத்திற்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை இந்தியா வந்து, பல கஷ்டங்களுக்கு மத்தியில் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக நெகிழ்ந்த அவர், தமிழ் சினிமாவில் பலர் நல்ல படைப்புகளுடன் வாய்ப்புகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்குச் சரியான மேடை அமைத்துத் தந்து தமிழ் சினிமாவில் நல்ல தரமான படைப்புகளை வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் தங்களது முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்ணன் ராஜா அவர்கள் தமக்காக மட்டுமே இந்தத் திரைப்படத்தில் எந்தவொரு சம்பளமும் வாங்காமல் நடித்துக் கொடுத்துத் தனது மிகச் சிறந்த கூட்டு உழைப்பைத் தந்துள்ளார் என்று பெருமிதத்துடன் கூறினார்.

அடுத்ததாக மேடையில் அதிரடியாகப் பேசிய தமிழகத்தின் முன்னணி அரசியல் ஆளுமை ஹெச். ராஜா,

தமக்கு ஏற்பட்ட கடுமையான உடல்நலக் குறைவின் போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமக்கு மிக அருகில் இருந்து ஆற்றிய மருத்துவ ஆதரவு தமக்கு மிகவும் முக்கியமானது என்று நெகிழ்ந்து கூறினார். இறைவன் அருளால் தமக்கு அறுவை சிகிச்சை முடிந்து வெறும் ஆறு மாதங்களிலேயே உங்கள் அனைவர்களின் மத்தியிலும் மீண்டும் வந்து கம்பீரமாகப் பேசும் அளவிற்கு உடல்நலம் பெற்றுள்ளதற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து படம் குறித்துப் பேசுகையில்,

“இப்படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் ராஜா அவர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட மறந்துவிட்டார். இந்த படத்தில் நடித்த எந்தவொரு நடிகர்களுக்கும் எவ்வித செயற்கையான மேக்கப்பும் போடப்படவில்லை. முற்றிலும் எதார்த்தமான தோற்றத்திலும், எளிய உடைகளிலும்தான் நாங்கள் நடித்துள்ளோம். இயக்குநர் மற்றும் படக்குழுவினர் கூறியபடி அப்படியே அச்சு அசலாக நடித்துக் கொடுத்துவிட்டு வந்தோம்” என்று மேடையில் சுவாரசியத்தை உடைத்தார்.

ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் எஸ். ராஜா இயக்கி, கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெயராம் இப்படத்தின் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இப்படத்தின் மாபெரும் விசேஷமாக, ஹெச். ராஜா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக ஒரு பவர்ஃபுல்லான சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், டாக்டர் சந்திரபோஸ் கதாபாத்திரத்தில் டாக்டர் எஸ். ராஜாவும், டாக்டர் விஜய் கதாபாத்திரத்தில் குரு விஜயும் நடித்துள்ளனர். வெறும் பண வரவு அல்லது சுயநல லாப நோக்கத்தை மட்டுமே முதன்மையாகக் கொள்ளாமல், சமூகக் கடமையுடன் நேர்த்தியாக இப்படத்தை உருவாக்கியுள்ளதால் இத்திரைப்படம் மக்களிடையே நிச்சயமாகப் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என்ற முழு நம்பிக்கை தமக்கு உள்ளதாக ஹெச். ராஜா கூறினார்.

குறிப்பாக, மருத்துவத் துறையில் இரவும் பகலும் அயராது பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களின் கஷ்டங்களையும், கண்ணீரையும் இப்படம் ஆழமாகப் பேசுகிறது. தமிழ் சினிமாவில் சமூகத்திற்குத் தேவையான அழுத்தமான கருத்துகளைப் பொழுதுபோக்குடன் எடுத்துரைக்கும் படைப்புகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வரிசையில், மருத்துவ விழிப்புணர்வு, மனிதநேயம், குடும்ப மதிப்புகள், பொறுப்பான சுகாதாரச் சேவை, தவறான மருத்துவத் தகவல்களுக்கான தீர்வுகள் மற்றும் போதைப்பொருள் எதிர்ப்புச் செய்தியை வலியுறுத்தும் ஒரு அழுத்தமான அரசியல் நாடகமும் சமூக மருத்துவ விழிப்புணர்வும் இணைந்த தனித்துவமான படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்றுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படம், வரும் 2026 செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.