போட்டோகிராபர் விமர்சனம்: மர்மக்காடும்… ஒரு புகைப்படக் கலைஞனின் மரணப் போராட்டமும்!

காடுகளுக்குள் எத்தனையோ ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன. அப்படி ஒரு அமானுஷ்யம் நிறைந்த ‘மதிகெட்டான் சோலை’ வனப்பகுதிக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது ‘போட்டோகிராபர்’ திரைப்படம்.

வீரா (அஷ்ரப் அலி) ஒரு வைல்ட்-லைப் புகைப்படக் கலைஞர். பூமியிலேயே மிகவும் அரிய, இரவும் பகலும் எப்போதும் சுயமாய் ஒளிரும் தன்மை கொண்ட ஒரு விசித்திரமான மரத்தைப் படம் பிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். அதற்காக யாருமே செல்லத் துணியாத அந்த அடர்ந்த காட்டுக்குள் தனியாக நுழைகிறார். ஆனால், அந்தப் பயணம் அவ்வளவு சுலபமாக அமையவில்லை. காட்டின் பிரம்மாண்டத்திற்குள் சிக்கித் திசை மாறும் வீரா, அங்கிருந்து உயிருடன் வெளியேற மரணப் போராட்டம் நடத்துகிறார். அந்தத் தனிமையும், கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகளும் அவரது மனநிலையை எப்படி உலுக்குகின்றன, அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஒரே ஆளாகக் கதை எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்திருக்கும் அஷ்ரப் அலிக்கு இது ஒரு துணிச்சலான முதல் முயற்சி. ஆரம்பக் காட்சிகளில் அவரது நடிப்பு கொஞ்சம் சுமாராகத் தெரிந்தாலும், காட்டின் பயமும் உளவியல் அழுத்தமும் தொற்றிக் கொள்ளும் இரண்டாம் பாதியில் மனிதர் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். குறைவான நேரமே வந்தாலும் அனனி சுவாமிநாதன் தனது இயல்பான முகபாவனைகளால் மனதில் நிற்கிறார். இவர்களுடன் வரும் கருணாகரன், ‘உறியடி’ சிவா, ஆடுகளம் நரேன், தேவி மகேஷ் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாக, ரயீஷ் அஹ்மத்தின் கேமரா காட்டின் இயற்கையான அழகைக் கண்முன்னே கொண்டு வந்திருந்தாலும், ஒரு த்ரில்லர் படத்திற்குத் தேவையான பயத்தை விஷுவலாகக் கடத்த இன்னும் உழைத்திருக்கலாம். குறிப்பாக, படத்தின் பலவீனமான கிராபிக்ஸ் காட்சிகள் ஏமாற்றம் அளிக்கின்றன. ஆனால், ராஜ்குமார் சந்திரசேகரனின் பின்னணி இசை அந்த குறையைத் தீர்த்து, இரண்டாம் பாதியில் நம்மை இருக்கை நுனியில் உட்கார வைக்கிறது. ஆர்.சி. பிரணவின் எடிட்டிங்கில் முதல் பாதியில் இருக்கும் தொய்வை, இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு ஈடுகட்டிவிடுகிறது.

மனிதனின் உயிர் பிழைப்புக்கான போராட்டத்தையும் (Survival), மன ரீதியான பயத்தையும் (Psychological horror) இணைக்க இயக்குநர் எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது. முதல் பாதியின் மந்தமான ஓட்டமும், பெரிதாக பயமுறுத்தாத திகில் காட்சிகளும் படத்திற்குச் சற்று முட்டுக்கட்டையாக அமைந்தாலும், இரண்டாம் பாதியில் வரும் அதிரடித் திருப்பங்களும், யாரும் எதிர்பார்க்காத அம்மா-மகன் பாசப் பின்னணியும் படத்தை ஒரு நிறைவான இடத்திற்குக் கொண்டு சேர்க்கின்றன.

சுமாரான கிராபிக்ஸ் காட்சிகளைப் பொறுத்துக் கொண்டு, ஒரு புதுமையான சர்வைவல் த்ரில்லர் படத்தை ரசிக்க நினைப்பவர்கள் தாராளமாக இந்த ‘போட்டோகிராபர்’ படத்தை ஒருமுறை பார்க்கலாம்!