ஃபுட் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வருபவர், வம்சி கிருஷ்ணா. இவரது ஆட்கள் பணம், நகை இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கின்றனர். அப்படி கொள்ளையில் நாயகன் விதார்த்துடன், வம்சி கிருஷ்ணா கும்பலுக்கு மோதல் ஏற்படுகிறது. இதனால் வம்சி கிருஷ்ணா கும்பல் விதார்த்தை தீர்த்துகட்ட முடிவு செய்கிறது. இதன்பிறகு நடக்கும் சம்பவங்களே ‘ஆற்றல்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் விதார்த், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவுடனான காதலிலும், வம்சி கிருஷ்ணாவுடனான மோதலிலும் தனது திறமையினை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஷ்ரிதா ராவ், பரவாயில்லை! அவரது திறமையினை நிரூபிக்க போதிய காட்சிகள் இல்லாததால் அவருக்கும் ஏமாற்றம் ரசிகர்களுக்கும் ஏமாற்றம்.
வில்லனாக நடித்திருக்கும் வம்சி கிருஷ்ணா, வீணடிக்கப்பட்டிருக்கிறார், விதார்த்தின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, மனதில் நிற்கிறார். விஜே விக்கி, வித்யூ ராமன், ரமா உள்ளிட்ட நடிகர்கள் ரசிகர்கள் மனதை கவரவில்லை!
கொளஞ்சி குமாரின் ஒளிப்பதிவும் , அஸ்வின் ஹேமந்தின் இசையும் பரவாயில்லை!
கதை எழுதி இயக்கியிருக்கும் கே.எல்.கண்ணன், விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லரை கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.
கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதை பெரும் சலிப்பினை ஏற்படுத்துகிறது.
ஆற்றல் – ஓய்வு நிலை ஆற்றல்!