‘பெண்ணியம்’ பேசும் அரை வேக்காடு! ‘அவள் அப்படித்தான் 2’ – விமர்சனம்!

இயக்குநர் ருத்ரய்யா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஶ்ரீப்ரியா ஆகியோரது நடிப்பினில், 1978 ல் வெளியான திரைப்படம், ‘அவள் அப்படித்தான்’. பெரும் சர்ச்சைக்குள்ளான, இப்படம் வணிக ரீதியில் பெரும் தோல்வியை சந்தித்தது.

இப்படத்தின் சாயலில் தற்போது வெளிவந்திருக்கும் படம், ‘அவள் அப்படித்தான் 2’. இதில் அபுதாஹிர், சினேகா பார்த்திபராஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜேஸ்வரி, சுமித்ரா, அனிதாஸ்ரீ, சுதாகர், வெங்கட்ரமணன், தனபால், சிறுமி கார்த்திகா, தொல்காப்பியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘அவள் அப்படித்தான் 2’ படத்தினை, இரா.மு. சிதம்பரம் எழுதி, இயக்கியுள்ளார். வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்க, அரவிந்த் சித்தார்த் இசையமைத்துள்ளார்.

யுன் ஃப்ளிக்ஸ் (Yun Flicks) சார்பில் செய்யது அபுதாஹிர் தயாரித்துள்ளார். எப்படி இருக்கிறது, “அவள் அப்படித்தான் 2’?

மஞ்சு (சினேகா பார்த்திபராஜா) ஒரு தனியார் பள்ளி ஆசிரியை.  முற்போக்கு, சுதந்திரமான சிந்தனையோடு இருப்பவர். பிறர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்க தயங்காதவர். இவரது கணவர், ராம் (அபுதாஹிர்) தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர்களுக்குப் பள்ளி செல்லும், ஒரே மகள்.

வழக்கமாக பள்ளிக்கு சென்ற மஞ்சு, இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாமல் இருக்கிறார். அதனால், வீட்டிலிருப்பவர்கள் அவரை காணாமல் தவிக்கிறார்கள். வெளியே சென்று வீடு திரும்பிய, கணவன் ராமிற்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அவர் தனது நண்பருடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் தேடுகிறார். ராம், சோர்ந்துபோய் வீடு திரும்புகிறார்.

இந்நிலையில், மஞ்சு காலையில் வீட்டிற்கு வருகிறார். குடும்பத்தினர் அவரை எங்கே போனாய் என்று விசாரிக்கின்றனர். கூடவே அவளது கணவர் ராம், ‘இரவு எங்கே போனாய்’ என்று கேட்கிறார். யாருக்கும் பதில் சொல்லாத மஞ்சு அவளது அன்றாட வேலைகளை, கேஷூவலாக செய்து வருகிறார். கணவர் ராம் வெவ்வேறு வகையில் ‘எங்கே போனாய்’, என கேட்கிறார். இதன் பிறகு என்ன நடந்தது என்பதே, ‘அவள் அப்படித்தான் 2’ திரைப்படத்தின் மொக்கையான, கதையும், திரைக்கதையும்.

‘Scout’ (சாரணர் இயக்கம்) என்றால் என்ன? என்ற கேள்விக்கு இயக்குநர் சொல்லுவாரு பாருங்க, ஒரு விளக்கம்…. !  அய்யோ!? அந்த காட்சியில் இயக்குநரின் தகுதியும், திறமையும்…. கெக்கே.. பிக்கே.. தான்.  அப்போ, மற்ற காட்சிகள் எப்படி இருக்கும்? எல்லாக் காட்சியுமே அப்படித்தான்! கதையும் வேஸ்ட், திரைக்கதையும் வேஸ்ட்.

காலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இரவில் திரும்பாமல், காலையில் வீடு திரும்பினால், கணவனோ, வீட்டில் உள்ளவர்களோ கேள்வி கேட்கக்கூடாது? இது தான் இப்படத்தின் மையக்கருத்து.

‘பெண்ணியம்’ என்ற பெயரில் சித்தரிக்கப்படும், இந்த கூத்துகளிலிருந்து ‘சினிமா’ வுக்கு எப்போ விடுதலை கிடைக்கும்?