ஸ்டைலிஷ் மிஸ்டரி மூவி!  ‘கொலை’ – விமர்சனம்!

Infiniti Film Ventures & Lotus Pictures தயாரித்து, பாலாஜி கே குமார் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், கொலை.

துப்பறியும் நிபுணராக நடித்திருக்கும் விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், முரளி ஷர்மா, சித்தார்த்தா ஷங்கர், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், ஆனந்த், சம்கித் போரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரபலமான மாடல் அழகி, மீனாட்சி செளத்ரி. மர்மமான முறையில் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த வழக்கை விசாரித்து வரும் ரித்திகா சிங், துப்பறியும் நிபுணர் விஜய் ஆண்டனியின் உதவியுடன் கொலையாளியையும், அதற்கான காரணத்தையும் கண்டுபிடிப்பதே கொலை படத்தின் கதை.

படம் ஆரம்பித்த ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு, உடனே கதைக்குள் சென்று விடுவதால், சுவாரசியம் தொற்றிக்கொள்கிறது. மர்மப் படங்களுக்கே உரித்தான திரைக்கதையுடன், ஃப்ளாஷ் பேக் உள்ளே ஒரு ஃப்ளாஷ் என, வித்தியாசமான கோணத்தில் ஸ்டைலிஷாக படமாக்கப்பட்டிருப்பது புதுமையாக இருக்கிறது.

படம் பார்ப்பவர்களுக்கு கொலை செய்தது, இவரா, அவரா என ஒவ்வொருவரின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி விடுகிறது. விஜய் ஆண்டனியின் விசாரணையின் போது அவரது பார்வையில், கொலையாளியின் நடவடிக்கைகள் ஆராயப்படும் போது இன்னும் சுவாரசியம்!

வித்தியாசமான திரைக்கதையில், முழுப்படத்தினையும் ஸ்டைலிஷாக வடிவமைத்திருப்பது, ஆங்கில படத்தினை பார்ப்பதை போன்ற உணர்வினை ஏற்படுத்துகிறது. அதற்கேற்றபடி நடிகர்களின் நடிப்பும்.

துப்பறியும் நிபுணராக, விநாயக் என்ற கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி, சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி விடுகிறார். அவரது தீர்க்கமான பார்வையும், விசாரிக்கும் விதமும் ரசிக்கும்படி இருக்கிறது.

விஜய் ஆண்டனியுடன் இணைந்து பயணிக்கும் போலீஸ் விசாரணை அதிகாரியாக ரித்திகா சிங், ஓகே வான நடிப்பினை கொடுத்து இருக்கிறார்.

போலீஸ் உயரதிகாரியாக ஜான் விஜய், வழக்கமான சேஷ்டைகளை விடுத்து நக்கல் போலீஸாக நடித்து மனம் கவர்கிறார்.

‘மிஸ் ஃபெமினா’ அழகிப் போட்டியில் பட்டம் பெற்ற ‘மாடல்’ மீனாட்சி சௌத்ரி, இந்தப்படத்தினில் ‘லைலா’ என்ற மாடல் அழகியாக நடித்திருக்கிறார். நடிகர்களில், ரசிகர்களின் அனைவரது கவனத்தையும் எளிதாக பெற்றுவிடுகிறார், மீனாட்சி சௌத்ரி.

அவரைப் போலவே முரளி ஷர்மாவும், ராதிகா சரத்குமாரும் நடிப்பினில் தங்களை தனித்து அடையாளப்படுத்தி கொள்கிறார்கள்.

மற்றபடி, மீனாட்சியின் காதலராக நடித்திருக்கும் சித்தார்த் சங்கர், அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சிவகுமார் விஜயனின், கோணங்கள் எல்லாமே அழகாக இருக்கிறது. மேம்பட்ட தரத்தினை கொடுத்துள்ளார். திரைக்கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவினை செய்திருப்பது படத்திற்கான பலம். க்ரீன்மேட் காட்சிகள் திறம்பட காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் நன்றாக இருக்கிறது. ஆனால், ஒரு மிகப்பெரும் குறை. இன்றுவரை ரசிக்கப்பட்டு வரும், புதிய பறவை படத்தில் இடம்பெற்ற ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாடலை, ரீமிக்ஸ் என்ற பெயரில் ‘கொதறி’ எடுத்து இருக்கிறார். அந்தப் பாடலை அப்படியே பயன் படுத்தியிருக்கலாம்!

ஃப்ளாஷ் பேக் உள்ளே ஃப்ளாஷ் என்ற திரைக்கதையில், காட்சிகள் குழப்பமில்லாமல் இருக்கிறது. படத்தொகுப்பாளர் ஆர்.கே செல்வாவை பாராட்டலாம்.

மெதுவாக செல்லும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து விறுவிறுப்பாக்கியிருக்கலாம்.

வழக்கமான மிஸ்டரி க்ரைம் மூவியாக இருந்தாலும், இயக்குநர் பாலாஜி கே குமார் வித்தியாசமான முறையில் ஒரு ஹாலிவுட் படத்தினை பார்க்கும் அனுபவத்தினை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறார்.

மொத்தத்தில், மிஸ்டரி, க்ரைம் த்ரில்லர் படங்களை பார்ப்பவர்களுக்கு, ‘கொலை’ நிச்சயம் பிடிக்கும்.