ஒரே காலனியில் வசித்து வரும் பால்ய நண்பர்கள், கல்லூரி படிப்பினை முடித்த பிறகு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை துவங்குகிறார்கள். ஆனால் அது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு, நண்பர்களுக்கிடையே மோதல் உருவாகி, ஒரு நண்பர் மட்டும் மற்றவர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார். அந்த நண்பர் மீண்டும் தனது நண்பர்களோடு இணைந்தாரா, ஸ்டார்ட்அப் நிறுவனம் வெற்றி பெற்றதா? என்பதே, நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் கதை, திரைக்கதை மற்றும் க்ளைமாக்ஸ்!
படம் தொடங்கும் போதும், முடியும் போதும் இயக்குநர் வெங்கெட்பிரபு, நாயகனாக நடித்திருக்கும் ஆனந்துடன் தோன்றுகிறார். ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் அனைவரும் செயற்கையாக தெரிகிறார்கள்.
அதே சமயத்தில், ஆனந்தின் அப்பாவாக நடித்திருக்கும் குமரவேல், அம்மாவாக நடித்திருக்கும் விஷாலினி, பாட்டியாக நடித்திருக்கும் குலப்புள்ளி லீலா ஆகியோர் அவர்களது கதாபாத்திரங்களுக்கு, தங்களது நடிப்பின் மூலம் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.எச்.காஷிஃப்’ பின் இசை பெரிதளவில் ஈர்க்கவில்லை.
ஒளிப்பதிவாளர் தமிழ் செல்வனின் ஒளிப்பதிவு ஓகே!
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த் கதை எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் போதிய சுவாரசியத்தை சேர்க்க தவறிவிட்டார்.
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ – வந்தா என்ன.. வராட்டா என்ன..!