யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான போட் திரைப்படம், இந்த வாரம் வெளியான படங்களில், அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. எப்படியிருக்கிறது?
இயக்குநர் சிம்புதேவனின், வழக்கமான ஃபேன்டசி படம் போட். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. இரண்டாம் உலகப்போரின் போது, இந்தியாவில் குறிப்பாக சென்னையில் குண்டு வீசப்படுவதாக மக்களிடையே தகவல் பரவுகிறது. இதன் காரணமாக சென்னையில் வசிக்கும் மக்கள் வேறு இடங்களுக்கு தப்பிச் செல்கிறார்கள்.
மீனவரான யோகிபாபுவும் அவரது பாட்டி குலப்புள்ளி லீலாவும், கடல் வழியாக தப்பிக்க முயற்சிக்கின்றனர். அதை பார்க்கும் சிலர் அந்த படகில் ஏறிக்கொள்கின்றனர். இந்தியாவின் வெவ்வேறு மொழிபேசும் அனைவரும் நடுக்கடலை நோக்கிச் செல்கின்றனர். அப்போது வேறொரு படகு விபத்துக்குள்ளாகி, அதிலிருந்த ஒரு ஆங்கிலேயர் யோகிபாபுவின் படகில் ஏறிக்கொள்கிறார். படகு அதிக பாரத்தால் தள்ளாடுகிறது. படகில் இருக்கும் சிலர் இறங்கினால் மட்டுமே மற்றவர்கள் பத்திரமாக கரைசேரும் நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது. இதன் பிறகு என்ன நடந்தது என்பது தான், போட் படத்தின் கதை.
உலக அரசியலை, சிம்புதேவன் தனது வழக்கமான நையாண்டியுடன் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். வெவ்வேறு மொழி பேசும் இந்தியர்கள், அவர்களை அடக்கி ஆள நினைக்கும் ஆங்கிலேயே அதிகாரி. இந்திய சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை. சாதிய பாகுபாடு என அனைத்தையும் தனக்கே உரிய ஸ்டைலில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
சென்னையின் பூர்வகுடியான, கதையின் நாயகனாக காசிமேடு பகுதி மீனவர் கதாபாத்திரத்தில் யோகி பாபு. சிறப்பாக நடித்திருக்கிறார். அவர், இயக்குநர் சிம்புதேவனின் முழுக்கட்டுப்பாட்டில் தன்னை கொடுத்திருக்கிறார். அதுவே கதைக்கு பலமாக அமைந்திருக்கிறது.
யோகிபாபுவின் படகில் பயணிப்பவர்களாக குலப்புள்ளி லீலா,கெளரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, சாரா, ஜெஸ்ஸி, அக்ஷத் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசை ஓகே!
மூலம் காட்சிகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்.
தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பும், டி.சந்தானத்தின் கலை இயக்கமும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது.
கடல் பயணம் தொடங்கிய முதல் சில காட்சிகள் உற்சாகத்தை கொடுத்தாலும், அதற்கு பிறகான காட்சிகள் எதுவும் சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
சிம்புதேவனின் உள்ளூர், உலக அரசியல் கவனம் ஈர்த்தாலும், திரைக்கதை அவ்வளவாக கவனம் ஈர்க்கவில்லை! அதுவே படத்தின் பெரும் பலவீனம்.
‘போட்’ – கரை சேரவில்லை!