எஸ் .என். ரெட்டி, பாலசுந்தரம் ஆகியோர் தயாரித்துள்ள ஜீப்ரா படத்தினை, எழுதி இயக்கியிருக்கிறார், ஈஸ்வர் கார்த்திக். இதில், சத்யதேவ், டாலி தனஞ்ஜெயா, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சுனில் வர்மா, சத்யா அக்காலா, ஜெனிபர் பிகினா டா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
வங்கியில் நடக்கும் பண மோசடியை, தனது விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார், இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.
ஒரே வங்கியில் வேலை செய்யும் சத்யதேவ், ப்ரியா பவானி சங்கர் இருவரும் காதலர்கள். ப்ரியா பவானி சங்கர், 4 லட்ச ரூபாயை செலுத்த வேண்டியவருக்கு செலுத்தாமல், வேறு ஒருவருக்கு தவறுதலாக செலுத்தி விடுகிறார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க, சத்ய தேவ், வங்கியின் மூலமாக மோசடி செய்து பணத்தை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து பல கோடி ரூபாய்கள் சத்ய தேவை முன்னிறுத்தி, மோசடி செய்யப்படுகிறது. இந்த மோசடியில் வசமாக சிக்கிக்கொள்கிறார் சத்ய தேவ். அதிலிருந்து தப்பித்தாரா, இல்லையா? அந்த மோசடியை செய்தது யார்? என்பது தான், ‘ஜீப்ரா’.
மோசடி செய்வதில், புத்திசாலியாக விளங்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார், சத்ய தேவ். பிரச்சனையில் சிக்கிய பிரியா பவானி சங்கரை மீட்க செய்யும் காட்சிகளில், பயத்தினையும், பதட்டத்தையும் சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதேபோல், டாலி தனஞ்செயா தனது பார்வையின் மூலமாகவே மிரட்டுகிறார், அவரது கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பினை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
இவர்களுக்கு ஈடு கொடுக்கும் வித்த்தில், ‘ஏ டூ ஒய் பாபா’ என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ், குறைவான காட்சிகளில், நிறைவான நடிப்பினை கொடுத்திருக்கிறார்.
வில்லத்தனம் கலந்த காமெடி பாத்திரத்தில், சுனில் வர்மா கலக்கியிருக்கிறார். படத்தினை போரடிக்க செய்யாமல் அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களை சோர்வின்றி கடத்துவதற்கு, இவரது கதாபாத்திரம் பெரிதும் உதவியிருக்கிறது.
ஜெனிபர், சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்களின் நடிப்பும், திரைக்கதை ஓட்டத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சத்யா பொன்மர், காட்சிகளை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஈஷ்வர் கார்த்திக், வங்கிகளில் பயன்படுத்தாத கணக்குகளில் இருந்து பணத்தை வங்கி அதிகாரிகள் பயண்படுத்துவதற்கான சாத்தியங்களை சொல்லிய விதத்தில் பகீர் கிளப்பியிருக்கிறார்.
முதல் பாதியில், கதையினை புரிந்துக் கொள்வது சற்று சவாலாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் டாலி தனஞ்செயா சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் பயணிக்க செய்கிறது.
பல லாஜிக் மீறல்கள் இருந்த போதும், திருப்பங்கள் நிறைந்த திரைக்கதை ரசிக்க வைக்கிறது!
மொத்தத்தில், ‘ஜீப்ரா’ – நன்று!