ஷாருக்கான், டாப்ஸி, விக்கி கௌசல், பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ள படம், டங்கி. எழுதி இயக்கியிருக்கிறார், ராஜ்குமார் ஹிரானி. இப்படத்தினை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லிஸ் என்டெர்டெயின்மென்ட், ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
பொருளாதாரத்தினை பெருக்கிக்கொள்வதற்காக, டாப்ஸியும் அவரது நண்பர்களும் இங்கிலாந்து செல்ல முயற்சி செய்கின்றனர். தகுதி இல்லாத காரணத்தினால், அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. இதனால் சட்ட விரோதமாக இங்கிலாந்திற்குள் செல்ல, முன்னாள் ராணுவ வீரரான ஷாருக்கானின் உதவியை நாடுகின்றனர். அவர் உதவினாரா, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்ன? எனபதே, டங்கி.
ஷாருக்கான் இளைஞர், முதியவர் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான வித்தியாசம் காட்டி நடித்திருக்கிறார். டாப்ஸியுடனான காதல் காட்சிகளில், ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கிறார். அதோடு, செண்டிமெண்ட் காட்சிகள் மட்டுமின்றி நகைச்சுவை காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார்.
டாப்ஸி, ஷாருக்கானுடனான காதல் காட்சிகளில் அதிகம் கவனம் ஈர்க்கிறார். அவருக்கும், ஷாருக்கானுக்குமான காட்சிகள் ரசனையுடன் படமாக்கப்பட்டிருக்கின்றன.
முதல் பாதி படத்தை நகைச்சுவையாக நகர்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கானின் ரசிகர்களை திருப்திப் படுத்தினால் மட்டும் போதும் என்ற கோணத்தில் திரைக்கதை மற்றும் காட்சிகளை அமைத்திருப்பது நன்கு தெரிகிறது அதை தவிர்த்திருக்கலாம். சட்டவிரோதமாக குடியேறுபவர்களை பற்றிய காட்சிகளில் சினிமாத்தனம் அப்பட்டமாக தெரிகிறது. அதே போல் அகதிகள் குறித்த காட்சிகள் இன்னும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்!
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக சில உண்மை நிகழ்வுகளை சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு!
சி.கே.முரளீதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் மற்றும் குமார் பங்கஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்றிடச் செய்கிறது. சட்ட விரோதமாக இன்னொரு நாட்டிற்குள் செல்லும் பாதையினை அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ப்ரீதமின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. அமன் பந்தின் பின்னணி இசை காட்சிகளுக்கேற்றபடி இருக்கிறது.
மொத்தத்தில் முக்கியமான ஒரு பிரச்சனையை நகைச்சுவையுடனும், ஷாருக்கான் – டாப்ஸி காதலுடன், ஷாருக்கான் ரசிகர்களை எளிதில் கவரும் விதத்தில் படமாக்கியிருக்கிறார், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.
‘டங்கி’ஷாருக்கானின் இன்னொரு வெற்றிப்படம்!