ராமய்யா கிழவனின் சாதிப் பற்று! ‘மார்கழி திங்கள்’ – விமர்சனம்!

கதை, திரைக்கதை எழுதி, இயக்குநர் சுசீந்திரன் தனது ’வெண்ணிலா புரொடக்ஷன்ஸ்’ சார்பில் தயாரித்துள்ள படம்,  ‘மார்கழி திங்கள்’. இப்படத்தின் வசனத்தை செல்லம் செல்லா எழுதியிருக்க, ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார். முதல் முறையாக மனோஜ் பாரதிராஜா இயக்கியிருக்கிறார்.

மார்கழி திங்கள் படத்தில், முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடித்திருக்க, ஷியாம் செல்வன், ரக்‌ஷனா, நக்‌ஷா சரண் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மார்கழி திங்கள்’ என்ற அழகான தலைப்பின் மூலம், ரசிகர்களை கவனிக்க வைத்த இந்தப்படம் எப்படி இருக்கிறது?

தாய், தந்தையை இழந்த கவிதாவை (ரக்‌ஷனா) அவரது தாத்தா (பாரதிராஜா) வளர்த்து வருகிறார். அவர், பேத்தியின் ஆசைகள் அனைத்தயுமே செய்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து வரும் கவிதா படிப்பில் சிறந்து விளங்குகிறார். இந்நிலையில் கவிதா படிக்கும் பள்ளியில், அவரது வகுப்பிலேயே வினோத் (ஷ்யாம் செல்வன்), புதிதாக சேர்கிறார். வினோத்தும் படிப்பில் சிறந்து விளங்குகிறார். அதன் பின்னர், வகுப்பில் நடக்கும் அனைத்து தேர்வுகளிலும் வினோத் அதிக மார்க்குகளை பெற்று, கவிதாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளுகிறார். வினோத் வருவதற்கு முன்னர் முதலிடத்தை பிடித்த கவிதாவுக்கு வினோத் மேல் வெறுப்பு வருகிறது. 10 வகுப்பு பொது தேர்வு நடைபெறவுள்ள் நிலையில், கவிதா வினோத்திடம், ‘இந்த தேர்வில் உன்னை விட அதிக மார்க்குகளை பெறுவேன்! இல்லையென்றால், 11 ஆம் வகுப்பில் நீ இல்லாத வகுப்பிற்கு செல்வேன்.’ என கூறுகிறார். தேர்வில் கவிதாவே முதலிடத்தை பிடிக்கிறார். சில நாட்கள் கழித்து தன் தோழி ஹேமாவின் (நக்‌ஷா சரண்) மூலம் வினோத் வேண்டுமென்றே விட்டுகொடுத்தது தெரிய வருகிறது. அதுவே காதலாக உருவெடுக்கிறது. இருவரும் காதலித்து வருகின்றனர்.

பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி செல்லும் நிலையில், கவிதா தன் காதல் குறித்து, தாத்தாவிடம் சொல்கிறார். தாத்தாவும் காதலுக்கு ஒகே சொல்லி ஒரு சில நிபந்தனைகளை விதிக்கிறார். அதன்படி இருவரும் நடந்து கொள்ள முடியாத சூழல் உருவாகிறது. இதன் பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா, இல்லையா? என்பதே மார்கழி திங்கள் படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் சுசீந்திரனின் வலுவில்லாத கதை மற்றும் திரைக்கதை மூலம், ஒரு இயக்குநரால் என்ன செய்ய முடியுமோ, அதை செய்திருக்கிறார், இயக்குநர் மனோஜ் பாரதிராஜா.

நடிகர், நடிகைகளை பொறுத்த வரை, நடிப்பில் ரக்‌ஷனா முதலிடத்தை பிடிக்கிறார். அவர் தன் கதாபாத்திரம் உணர்ந்து, சிறப்பாக நடித்திருக்கிறார். ஜாலியாக ஆடிப்பாடவும், உணர்ச்சிகரமான காட்சிகளிலும், முக்கியமாக க்ளைமாக்ஸ் காட்சியில், வசனம் சொதப்பியிருந்தாலும் அந்தக்காட்சி ரக்‌ஷனாவின் நடிப்பின் மூலம் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது. அதன் பின்னர், தோழியாக நடித்திருக்கும் நக்‌ஷா சரண் மற்றும் ஷ்யாம் செல்வன், இருவரும் இடம் பிடிக்கின்றனர்.

வில்லனாக சுசீந்திரன், பெரிதாக மனம் கவரவில்லை! அவரைப் போலவே பாரதிராஜாவும். ஆனால், ஒரே ஒரு காட்சியில் மிரட்டியிருக்கிறார். கவிதா, தனது காதலை தாத்தாவிடம் சொல்லும் காட்சியில், (பாரதிராஜா) தாத்தா அவரது பார்வையில் மொத்த வெறியினையும் காட்டி விடுகிறார். மிரட்டலான காட்சி!  சாதிப் பற்றில் ஊறிப்போன பக்குவமான கிழவரை கண்முன் நிறுத்தி விடுகிறார்.

மெதுவாக நகரும் திரைக்கதையில், பெரும்பாலான காட்சிகள் ஸ்லோ மோஷனில் படமாக்கப்பட்டிருக்கிறது. அது மேலும் படத்தை மெதுவாக நகரச் செய்வதோடு, படம் பார்ப்பவர்களை பொறுமையிழக்கவும் செய்து விடுகிறது.

‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருக்கிறார்!?

ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு, ஆறுதல் தருகிறது. காட்சிகள் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, ரக்‌ஷனாவின் நடிப்பினையும், க்ளைமாக்ஸையும் தவிர படத்தில் குறிப்பிட்டுச்சொல்ல எதுவுமில்லை! சூப்பர் க்ளைமாக்ஸ்!